என் மலர்
நீங்கள் தேடியது "preacher arrest"
- அங்க அடையாளங்களை வைத்து வெள்ளி வேல் திருடிய நபரை தேடி வந்தனர்.
- அவரிடம் இருந்த வெள்ளி வேலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வடவள்ளி:
கோவை மருதமலை அடிவாரத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வேல் கோட்டம் என்ற தனியார் தியான மடம் உள்ளது.
இங்கு வேல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு 2½ அடி உயரத்தில் வெள்ளி வேல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
தினமும் காலையில் இந்த மடத்தில் வேல் வழிபாடு நடப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி, மடத்தின் உரிமையாளர் வேல் வழிபாடு நடத்துவதற்காக மடத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேல் திருடு போயிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர், உடனே மடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதில், மொட்டையடித்த நிலையில் காவி உடையணிந்து சாமியார் ஒருவர் மடத்திற்குள் நுழைவதும், அங்கு இருந்த வெள்ளி வேலை எடுத்து, சட்டைக்குள் மறைத்து கொண்டு, மடத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
உடனடியாக மடத்தின் உரிமையாளர் சம்பவம் குறித்து வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். மருதமலை கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து வந்த வேளையில், அடிவாரத்தில் உள்ள மடத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, வெள்ளி வேல் திருடிய நபரை பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி அதில் உள்ள அங்க அடையாளங்களை வைத்து வெள்ளி வேல் திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மருதமலை அடிவார பகுதியில் போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சி.சி.டி.வியில் இருந்த அங்க அடையாளங்கள் படி சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஊர், ஊராக சென்று மடத்தில் தங்கும் சாமியாரான திண்டுக்கல் மாவட்டம் திருமலை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் சர்மா (வயது37) என்பது தெரியவந்தது.
இவர் தான் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேலை திருடி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த வெள்ளி வேலை பறிமுதல் செய்தனர். சாமியார் வெங்கடேஷ் சர்மா, வெள்ளி வேலை திருடியதும், அதனை உருக்கி விற்பனை செய்ய முயன்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






