search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pocket Alcohol"

    திருவாரூர் அருகே பாக்கெட் சாராயம் குடித்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்படுகை கிராமத்தை சேர்ந்த குப்பு மகன் துரைசாமி (வயது 47). விவசாயி. இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு 18 வயதில் மகள் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று துரைசாமி, அப்பகுதியை சேர்ந்த 2 பேரிடம் 1 பாக்கெட் சாராயம் வாங்கி குடித்துள்ளார். இதில் போதை அதிகமாகி துரைசாமி அங்கேயே மயங்கிக்கிடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாலை அங்கு மேலும் சிலர் அங்கே சாராயம் குடிக்கவந்தபோது, துரைசாமி இறந்துகிடந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் துரைசாமியின் குடும்பத்தினருக்கும், குடவாசல் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துரைசாமியின் உடலை அவருடைய குடும்பத்தினர் வீட்டுக்கு எடுத்துச்சென்றனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரகுபதி, குடவாசல் இன்ஸ்பெக்டர் மணிமாறன், நன்னிலம் தாசில்தார் அன்பழகன் ஆகியோர் வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்து துரைசாமியின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்க போலீசார் முயன்றனர்.

    ஆனால் அவர்களை தடுத்த துரைசாமியின் உறவினர்கள் மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ‘‘எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாராய விற்பனை நடக்கிறது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பமாட்டோம்’’ என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குடவாசல் போலீசார் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக ஜெயபால், சிங்காரவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் சாராய வியாபாரி கேசவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். #Tamilnews
    ×