search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pettai Railway Station"

    • பேட்டை ரெயில் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் ரெயில் முன்பதிவுக்கு வழி வகைகள் செய்யப்பட்டுள்ளது.
    • ஏஜெண்டுகள் முந்தைய நாள் இரவே முன்பதிவு விண்ணப்பங்களை எழுதி வைத்து இடம் பிடித்து விடுகின்றனர்.

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் ரெயில் பயணம் செய்யும் பயணிகளை அதிக அளவில் கொண்ட மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள சந்திப்பு ரெயில் நிலையம் அதிக வருவாயை ஈட்டி கொடுக்கும் ரெயில் நிலையமாக இருந்து வருகிறது.

    முன்பதிவு

    தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதற்கு நெல்லை சந்திப்பு உள்பட ரெயில் நிலையங்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வசதிக்காக பாளை ரெயில் நிலையம், பேட்டை ரெயில் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் ரெயில் முன்பதிவுக்கு வழி வகைகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பேட்டை ரெயில் நிலையத்தில் அதனை சுற்றி அமைந்துள்ள கிராமங்களான சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், கொண்டா நகரம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இருந்து தட்கல் முறையில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் வருகின்றனர்.

    ஏஜெண்டுகள்

    ஆனால் சில தனியார் நிறுவன ஏஜெண்டுகள் முந்தைய நாள் இரவே முன்பதிவுக்கு பயன்படுத்தும் விண்ணப்பங்களை எழுதி வைத்து இடம் பிடித்து விடுகின்றனர். அவர்களே குறைந்தபட்சம் 5 முதல் 10 டிக்கெட்டுகளுக்கு முன்பதிவுக்கு எழுதி வைத்து விடுவதால் முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    இவ்வாறாக முன்பதிவு செய்யும் ஏஜெண்டுகள் அந்த டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்று விடுவதாக ரெயில் பயணிகள் சங்கத்தினர் புகார் கூறி வருகின்றனர்.

    எனவே சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ளது போல முன்பதிவு செய்யும் நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களில் யாரேனும் ஒருவர் கண்டிப்பாக வந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வரிசையில் நிற்க வேண்டும். முன்கூட்டியே முன்பதிவு விண்ணப்பத்தை நிரப்பி வரிசையில் வைப்பதை தடுக்க வேண்டும். மேலும் பேட்டை ரெயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் எடுக்கும் போது பயணிகள் இடையே ஏற்படக்கூடிய பிரச்சனையை சரி செய்ய அங்கு பாதுகாப்புக்கு ரெயில்வே போலீசார் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×