என் மலர்
நீங்கள் தேடியது "people affected by eye iritation"
தேனி, மே. 29-
தேனி அருகே கோவில் விழாவில் வீசிய விபூதியால் 300 பேருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் கடந்த 5 நாட்களாக சவுடாம்பிகை அம்மன் கோவில் திருவிழா நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
கத்தி போடும் சமயங்களில் உடலில் அதிக அளவு ரத்தம் வெளியேறாமல் தடுக்க அவர்கள் மீது விபூதி வீசுவது வழக்கம். அதன்படி திருவிழாவில் கத்தி போட்டு ஆடி வந்த பக்தர்கள் மீது விபூதி வீசப்பட்டது.
இரவு திருவிழா முடிந்ததும் பக்தர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு லேசான கண் எரிச்சல் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல கண்கள் வீங்கி எரிச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் இன்று காலை முதல் தேனியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களுக்கு முதல் கட்டமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் திருவிழாவின் போது பக்தர்கள் மீது வீசிய விபூதியில் ரசாயனக் கலவை கலந்ததால் இது போன்று நடந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த விபூதியை ஆய்வுக்கு அனுப்பி சோதனை நடத்தவும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கண் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews