என் மலர்

  நீங்கள் தேடியது "passenger airplane"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று மதுரை பெண் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
  பெங்களூரு:

  மத்திய அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று மதுரை பெண் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜக்கூரில் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1997-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. 2013-ம் ஆண்டு மீண்டும் விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி திறக்கப்பட்ட உடன், முதல் ‘பேட்ஜ்’-ல் மதுரையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரவிக்குமார் என்பவரின் மகளான காவியா (வயது 23) விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி பெறுவதற்காக சேர்ந்தார்.

  கட்டணம் அதிகமாக இருந்ததால், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த காவியா முறையாக பயிற்சி பெறமுடியாத சூழல் இருந்தது. இதையடுத்து 2015-ம் ஆண்டு மத்திய அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்தார். ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் காவியாவுக்கு, மத்திய அரசின் உதவித்தொகை மூலம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தடையின்றி தொடருவதற்கான வாய்ப்பு கிட்டியது.

  மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ், குறிப்பிடத்தகுந்த கல்வி நிலையங்களில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசமாகவும், தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்துக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது. மேலும் பயணிகள் விமானத்தை இயக்குவதற்காக தனியார் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.3.72 லட்சம் உதவித்தொகையாக வருடத்துக்கு வழங்கப்படுகிறது.

  இதுதவிர மாதாந்திர செலவுகளுக்காக ரூ.2 ஆயிரத்து 220, நோட்டு, புத்தகங்கள் வாங்குவதற்காக வருடத்துக்கு ரூ.3 ஆயிரம், நவீன வசதி உடைய கம்ப்யூட்டர் மற்றும் ஒருமுறை உதவியாக ரூ.45 ஆயிரம் ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து 2012-ம் ஆண்டு இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்த காவியா ரூ.20 லட்சம் உதவி பெற்று, ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 வருடத்துக்கு பின்னர் (1997-ம் ஆண்டு கடைசியாக உரிமம் வழங்கப்பட்டது) பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த பயிற்சிக்கு இடையே, விமான ரேடியோ தொலைபேசி ஆபரேட்டர் உரிமமும் காவியா பெற்றுள்ளார்.

  இதுகுறித்து அரசு விமான பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் கமாண்டர் அமர்ஜித்சிங் டாங்கே கூறும்போது, விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி மீண்டும் திறந்த பின்னர் பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் காவியாவுக்கு கிடைத்துள்ளது. இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சிறந்த மாணவராக அவர் திகழ்ந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றார்.

  உரிமம் பெற்றது குறித்து விமானி காவியா கூறியதாவது:-

  விமானி ஆகவேண்டும் என்பது என்னுடைய குழந்தை பருவ ஆசை. மதுரையில் 12-ம் வகுப்பு படித்த பின்னர், அரசு விமான பயிற்சி பள்ளியில் சேருவதற்கு விரும்பினேன். ஆனால் அதற்கான கட்டணம் ரூ.25 லட்சம் ஆகும். இதனை என்னுடைய குடும்பத்தால், ஏற்பாடு செய்ய இயலாது. இருந்தபோதிலும் என்னுடைய பெற்றோர், கடுமையான கஷ்டத்துக்கு பின்னர் அங்கும், இங்குமாக ஓடி திரிந்து ரூ.6 லட்சம் கடன் வாங்கினார்கள்.

  இதையடுத்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினேன். ஒரு மணி நேர பயிற்சிக்கு ரூ.10 ஆயிரம் என்பதால் என்னிடம் இருந்த பணத்தை வைத்து 46 மணி நேரமே பயிற்சி மேற்கொள்ளும் நிலை இருந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் என்னுடைய பயிற்சி முழுவதுமாக தடைபட்டது. இதையடுத்து மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்தேன்.

  ஆதிதிராவிட மாணவர்களுக்கு உயர் வகுப்பு கல்விக்காக உதவும் மத்திய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் உதவித்தொகை கிடைத்தது. இதன்மூலம் எனக்கு 200 மணி நேரம் விமான பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மத்திய அரசு அளித்த உதவித்தொகை என்னுடைய கனவை மீட்டெடுத்தது.

  உதவித்தொகை கிடைத்ததில் இருந்து என்னுடைய வாழ்க்கையை நான் பின்னோக்கி பார்த்தது இல்லை. விமானி ஆகவேண்டும் என்ற என்னுடைய வாழ்நாள் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது. பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான பணியில் சேருவதில் மிகுந்த ஆர்வம் இல்லை. விமான ஓட்டுனர் பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

  இவ்வாறு அவர் கூறினார். 
  ×