search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palkuda vila"

    • அபிஷேக பிரியை முண்டகக்கண்ணி அம்மன்.
    • ஆடி மாதம் முழுவதும் அன்னைக்குரிய மாதமாகும்.

    `மலைத்தேன் எடுத்து வந்து மாரிக்கு அபிஷேகம்

    தென்னை இளநீராலே தேவிக்கு அபிஷேகம்

    மாம்பழச் சாறாலே மாரிக்கு அபிஷேகம்

    மஞ்சள் நீரெடுத்து மகமாயிக்கு அபிஷேகம்'

    என்ற நாட்டு பாடலுக்கு ஏற்ப, அபிஷேக பிரியையான அன்னை முண்டகக் கண்ணிக்கு தினசரி காலை 6.30 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரை அபிஷேகங்கள் பக்தர்களால் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதற்காக இந்த அபிஷேகங்களை தினசரி நடத்துகிறார்கள். சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சையென பக்தர்கள் செய்யும் அபிஷேகங்களால் அன்னை குளிர்ச்சியாய் இருப்பாள். செய்யும் அபிஷேகங்களுக்கு ஏற்ப அன்னை பின்வரும் பலன்களை தருவாள்.

    சந்தனக்காப்பு-செல்வம் அளிக்கும்

    மஞ்சள் காப்பு - வசீகரணம் உண்டாக்கும்

    பால் - ஆயுளை வளர்க்கும்

    தயிர் - மக்கட்பேறு அளிக்கும்

    பஞ்சாமிர்தம் - வெற்றியைத் தரும்

    தேன் - சுகமளிக்கும்

    இளநீர் - போகமளிக்கும்

    எலுமிச்சை - எம பயத்தைப் போக்கும்

    இங்கு வழங்கப்படும் தீர்த்தத்தைப் பருகுவோர் அம்மைநோய் முதலான எல்லாவகை நோய்களில் இருந்தும் நிவர்த்தியாகி நன்மை பெறலாம்.

    பொங்கலிடுதல்

    வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கு முன்னோடியாகவும் வேண்டுதல் நிறைவேறியதற்காகவும் இந்த கோவிலில் பொங்கலிடுவது வழக்கம். ஆடி, தை வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்போர் கூட்டம் அதிகம். இங்குள்ள பொங்கல் மண்டபத்தில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து இடைவிடாமல் பொங்கலிடுதல் நடைபெறும்.

    நித்ய பூஜை

    இத்திருக்கோவிலில் தற்போது நாள்தோறும் காலை, நண்பகல் இருவேளைகளிலும் பூசாரிகளால் ஆராதனை நடத்தப்படுகிறது. காலை சந்தி - காலை 7.00 மணி, உச்சிக்காலம் - பகல் 12.00 மணி

    திருக்கோவில் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். விழா நாட்களில் திருக்கோவில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாட்டிற்கு திறந்திருக்கும்.

    ஆடிப்பூரம்

    ஆடி மாதம் முழுவதும் அன்னைக்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் மழை ஆரம்பித்து ஐப்பசி வரையிலும் தொடரும். பருவ நிலையால் ஏற்படும் நோய் நொடியிலிருந்தும், இயற்கை சேதங்களிலிருந்தும் காக்கும்படி அன்னையை ஆடி மாதத்தில் வேண்டி வழிபடுவர்.

    ஆடித்திங்களில் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அன்னையின் கோவிலை மொய்த்திருக்கும். அன்னையை வலம் வருவது, அங்கப்பிரதட்சணம் செய்வது, வேப்பஞ்சேலை அணிந்து வலம் வருவது, கூழ் ஊற்றுவது, பொங்கலிடுதல், அபிஷேகம் செய்தல் முதலான பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெறும். அந்நாட்கள் முழுவதும் கோவில் விழாக்கோலம் பூண்டிக்கும்.

    இத்திருக்கோவிலில் ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது. அம்பிகை பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பதற்காக திரு அவதாரம் செய்த திருநாளே ஆடிப்பூரமாகும். ஆடிப்பூரம் உற்சவம் செய்வதால் ஊருக்கு நன்மையும், மழையும், நல்ல மகசூலும் அன்னை வழங்குவாள் என்பது நம்பிக்கை.

    நவராத்திரி

    நவராத்திரி என்பதற்கு ஒன்பது இரவு என்பது பொருள். புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களில் அன்னை பராசக்தியைப் பல வடிவாகப் பூசித்து விழா நடத்துவது நவராத்திரி விழாவாகும். பத்தாம் நாளை விஜயதசமி விழாவாக கொண்டாடுகிறோம்.

    பராசக்திக்கு ஏற்பட்ட பெருவிழாவே நவராத்திரியாகும். முதல் மூன்று நாட்கள் வெற்றியை நல்கும் மலைமகளுக்கும், அதன்பின்னர் மூன்று நாட்கள் செல்வத்தைக் கொடுக்கும் திருமகளுக்கும், கடைசி மூன்று நாட்கள் கல்வியைக் கொடுக்கும் கலைமகளுக்கும், பத்தாம் நாளன்று எல்லாக் கலைகளுக்கும் தலைவியாம் சகலகலாவல்லிக்கும் விழாவெடுப்பதே நவராத்திரி விழாவாகும்.

    நவராத்திரி விழாவின்போது, இத்திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் அன்னை முண்டகக் கண்ணி பார்வதி, கவுரி, சரஸ்வதி, பத்மாசினி, மீனாட்சி, மகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, சிவபூஜா கம்பாநதி, கஜலட்சுமி தோற்றங்களில் எழுந்தருளி காட்சி தருவாள்.

    நவராத்திரியில், தினசரி பகல் 12 மணிக்கு அபிஷேகம், மாலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரமும், ஆபரண அலங்காரமும், தூப தீப தீப ஆராதனையும் நடைபெறும்.

    பத்தாம் நாள் விஜயதசமியன்று இரவு, அன்னை முண்டகக் கண்ணி மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருவாள். சிறப்பு மேள வாத்தியத்துடன், ஓதுவாமூர்த்தி குழுவினரின் தேவார இன்னிசையுடனும் வீதியுலா நடைபெறும்.

    நவராத்திரி விழாவின்போது தினசரி இரவில் முன்னணிப் பாடகர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். நவராத்திரி கடைசி மூன்று தினங்களில் லட்சார்ச்சனை நடைபெறும்.

    சித்ரா பவுர்ணமி பால்குட விழா

    சித்திரை மாதம் கடும்கோடை காலம், அன்னையோ குளிர்ச்சியுடையவள்; எப்போதும் குளிர்ச்சியை நாடுபவள், தன்னை சூழ்ந்த பக்த கோடிகளுக்கு அம்மை நோய் வராமல் காப்பவள்.

    அன்னைக்கு 1986-ம் ஆண்டில் சித்ரா பவுர்ணமி அன்று 108 பால்குட விழா எடுத்து பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி அன்று பால்குட விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. 1992-ம் ஆண்டில் சித்ரா பவுர்ணமி அன்று 508 பால்குட விழாவாக நடைபெற்றது. அது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்தப்படி உள்ளது.

    சித்ரா பவுர்ணமி அன்று காலை 8 மணியளவில் ஆண்களும் பெண்களுமாக பக்த கோடிகள் பால்குடம் சுமந்து கோவில் இருந்து புறப்பட்டு அம்மன் வீதியுலா செல்லும் மாடவீதி வழியாக வலம் வந்து கோவில் வந்தடைந்து அன்னைக்கு பால்குட அபிஷேகம் நடைபெறும்.

    அன்றிரவு சிறப்பு மேளம், பேண்டு வாத்தியத்துடன் அன்னை வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவாள். அன்னைக்குப் பாலாபிஷேகம் செய்வோர் ஆயுள் விருத்தி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பால்குடம் எடுத்து அன்னைக்கு அபிஷேகம் செய்வோர், நீண்ட ஆயுளும், ஆராக்கியமும், செல்வமும், எல்லா நலன்களும் பெற்று நீடுழிவாழ்வார்கள்.

    ×