search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palani mariamman"

    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

    வருகிற 23-ந் தேதி இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இதைத்தொடர்ந்து 10.30 மணிக்கு 3 கோவில்களிலும் கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 27-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கிராமசாந்தியும், 28-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றமும் நடக்கிறது.

    ஏப்ரல் மாதம் 2-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், இரவு 9 மணிக்கு மாவிளக்கு பூஜையும், பெரிய மாரியம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 3-ந் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடக்கிறது.

    4-ந் தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன், 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன், இரவு 10 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 6-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக மாரியம்மன் கோவில் உள்ளது. பழனி கிழக்கு ரத வீதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் லிங்க வடிவில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

    11-ம் நாளான நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, பலி பூஜை ஆகியவை நடைபெற்றது. 12-ம் நாளான நேற்று இரவு மாரியம்மன் சன்னதியில் 5 கலசங்கள் வைத்து புண்ணியாவாஜனம், விநாயகர் பூஜை, சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனையடுத்து காப்பு கட்டப்பட்டது. பின்னர் கொடிபூஜை நடந்தது.

    கொடிப் படம் கோவிலில் வலம் வந்து கொடிமரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கொடிமரத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண சிறப்பு அலங்காரத்தில் கொடி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார்.



    பின்னர் மாரியம்மன் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்து வந்து திருக்கம்பத்தில் வைத்தலும், தீபாராதனையும், மாரியம்மன் பெரிய தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திரு உலா காட்சியும் நடைபெற்றது. 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் இன்று(புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    அதன்பிறகு இரவில் சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது. வருகிற 19-ந்தேதி இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கன்னியா லக்னத்தில் திருக்கல்யாணமும், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 20-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 21-ந்தேதி இரவு 10 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சந்திரமவுலி, சுந்திர மூர்த்தி சிவம் மற்றும் கோவில் பண்டாரங்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவின் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக மாரியம்மன் கோவில் திகழ்கிறது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் அம்மன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. சாமி உத்தரவின்பேரில் கொடைக்கானல் சாலையில் உள்ள ஒரு தோப்பில் இருந்து கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டது.

    பின்னர் வையாபுரிகுளத்துக்கு கம்பம் கொண்டுவரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நான்கு ரதவீதிகளில் கம்பம் சுற்றி வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்பு காலை 7 மணிக்கு கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கம்பத்திற்கு தீபாராதனை நடந்தது. மேலும் பக்தர்கள் பால், மஞ்சள்நீரை ஊற்றி வழிபாடு செய்தனர்.

    விழாவில் வருகிற 12-ந் தேதி கொடியேற்றமும், பூவோடு வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 19-ந் தேதி இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. 21-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் கொடியிறக்குதலுடன் திருவிழா முடிவடைகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் இரவு வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    பழனி மாரியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சத்தில் வடிவமைக்கப்பட்ட தேர் நாளை மறுநாள் ரதவீதிகளில் வெள்ளோட்டம் நடக்கிறது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் மாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படும். அப்போது ரதவீதிகளில் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தேரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தைப்பூசத்திருவிழாவுக்கு பயன்படுத்தும் தேரையே மாசி மாத திருவிழாவுக்கும் கோவில் நிர்வாகிகள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாரியம்மன் கோவிலுக்கு என்று புதிதாக தேர் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து ரூ.18 லட்சத்தில் தேர் வடிவமைக்கும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. இழுப்பை, வாகை மரங்களை பயன்படுத்தி தேரை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர் வடிவமைப்பு பணி நிறைவடைந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்ட போது, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தேர் 36 அடி உயரம் கொண்டது ஆகும். தேர் வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.

    முன்னதாக புதிய தேருக்கான சிறப்பு பூஜை, தேர் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் நாளை மறுநாள் காலை 10.20 மணிக்கு மேல் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெறும். அப்போது ரதவீதிகளில் தேர் சிரமம் இன்றி வலம் வருகிறதா? என்று சோதனை நடத்தப்படும் என்றனர்.

    ×