search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "orderlyduty"

    உயரதிகாரியின் மகளால் தாக்கப்பட்ட கடைநிலை காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் துறையில் இனி எடுபிடி வேலைக்கு ஆள் கிடையாது என கேரள முதல்வர் உறுதியளித்துள்ளார். #Keralagovt #Orderlyduty #Pinarayivijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில போலீஸ் ஆயுதப்படை பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர் சுதேஷ் குமார். இவரது வீட்டில் காவலர் கவாஸ்கர் என்பவர் அப்துல் கறீம் கவாஸ்கர் என்பவர் ‘ஆர்டலி’யாக பணி செய்துவந்தார். 

    கார் டிரைவராகவும் ஏ.டி.ஜி.பி-யின் மனைவி மற்றும் மகளை திருவனந்தபுரம் நேப்பியார் மியூசியம் வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 14-ம் தேதி காலையில் நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார். நடைப்பயிற்சி முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது அவர்களின் அருகே காரை கொண்டு செல்ல சற்று கால தாமதமானதால் கவாஸ்கரை கூடுதல் டி.ஜி.பி-யின் மகள் ஸ்நிக்தா திட்டியிருக்கிறார். 

    தொடர்ந்து, கவாஸ்கர் காரை ஒட்டிச் சென்றபோதும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஸ்நிக்தா செல்போனால் தாக்கியதில் கழுத்து, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட  கவாஸ்கர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    தன்னை ஏ.டி.ஜி.பி-யின் மகள் தாக்கியதாக கவாஸ்கர் போலீசில் புகார் செய்தார். ஆனால் அவரது புகாரை ஏற்றுக்கொள்ளாமல் ஏ.டி.ஜி.பி-யின் மகள் கொடுத்த எதிர்புகாரின் அடிப்படையில் மியூஸியம் காவல்நிலையத்தில் கவாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, கவாஸ்கருக்கு ஆதரவாக காவலர் நலச் சங்கம் தலையிட்டதால் ஏ.டி.ஜி.பி மகள் மீது பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    இதையடுத்து ஏ.டி.ஜி.பி சுதேஷ் குமார் மற்றும் கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவலர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலையிட்டதைத் தொடர்ந்து ஸ்நிகிதாவின் தந்தை சுதேஷ்குமார், ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி. பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீட்டில் பணிபுரியும் ஆர்டலிகளின் பட்டியல் மற்றும் வாகனங்களின் விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேரள அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில், கேரள சட்டசபையில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளித்த முதல் மந்திரி பினராயி விஜயன், போலீஸ் துறையில் இருந்து இனி உயரதிகாரிகளின் வீடுகளுக்கு ‘ஆர்டர்லி’ (எடுபிடி) வேலைக்கு ஆள் அனுப்பும் வழக்கம் ஒழிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கே. சபரிநாதன் என்பவரின் கேள்விக்கு பதிலளித்த பினராயி விஜயன், உயரதிகாரிகளின் வீடுகளில் கடைநிலை காவலர்களை வேலைக்கு அனுப்பும் பழக்கம் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது. இழிவான இந்தப் பழக்கம் கேரள மாநிலத்தில் இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

    காவல்துறை என்பது கட்டுப்பாடான அமைப்பாகும். ஆனால், கட்டுப்பாடு என்னும் பெயரில் மனித உரிமை மீறல்களை அனுமதிக்க முடியாது. அரசின் உத்தரவை மீறி நடந்துகொள்ளும் உயரதிகாரிகள் யாரானாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பினராயி விஜயன் உறுதியளித்தார். #Keralagovt #Orderlyduty #Pinarayivijayan
    ×