search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officers notice"

    போக்குவரத்து கழக ஊழியர்கள் வருகிற 19-ந் தேதி அல்லது அதற்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரிகளிடம் நோட்டீசு வழங்கியுள்ளனர். #transportworkers #strike
    சென்னை:

    சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் நடராஜன், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆறுமுகநயினார், சுப்பிரமணியன், வேணுராம், திருமலைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகங்களை சீரமைக்க நிதி வழங்குவதோடு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தை அரசு வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், சமனற்ற ஊதிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். ஊழியர்களுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வின்போதே ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் இதுவரை இல்லாத அளவு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் 30 லட்சம் பயணிகள் வேறுவிதமான பயண முறைக்கு மாறிவிட்டனர். சட்டவிரோதமான ஷேர்ஆட்டோக்கள், ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் போக்குவரத்து கழகங்கள் கடும்போட்டியை சமாளிக்க வேண்டியுள்ளது. எனவே பேருந்து கட்டணத்தை முறைப்படுத்தி பொதுபோக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும்.



    போக்குவரத்து கழகங்களில் 20 ஆயிரம் காலி பணியிடங்கள் காரணமாக 2 ஆயிரம் பேருந்துகளை இயக்க முடியவில்லை. சென்னையில் 450 பேருந்துகள் இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வுக்கு முன்பு ரூ.8 கோடியாக இருந்த நஷ்டம் தற்போது ரு.9 கோடியாக உயர்ந்துள்ளது.

    எனவே போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அளித்துள்ளோம். அரசின் நடவடிக்கையை பொறுத்து 19-ந் தேதி அல்லது அதற்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே சம்பள உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  #transportworkers #strike
    ×