search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North State Labor"

    • தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
    • தீ வைப்பு சம்பவங்களும், பெட்ரோல் குண்டு வீசும் சம்பவமும் நடந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல், புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் ஆகியோருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இங்குள்ள கொட்டகைகள் மற்றும் அங்கு வேலை செய்யும் பிற மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீடுகளுக்கு கடந்த வாரம் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இதில் 10 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவங்கள் தொடர்பாக 6 பேரை ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் வக்கீல் துரைசாமி (வயது 57) என்பவர், தனக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய குடிசை வீடுகள் அமைத்திருந்தார். அதில் ஒரு கொட்டகையில் 3 டிராக்டர்களை நிறுத்தி வைத்திருந்தார்.

    நேற்று நள்ளிரவில் கொட்டகைக்கு பின்புறம் வந்த மர்ம நபர்கள், அதற்கு தீ வைத்தனர். இதில் குடிசைகள் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்களும் தீப்பிடித்து எரிந்தன.

    இதை பார்த்த துரைசாமி, ஓடிவந்து டிராக்டரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது கூரையில் எரிந்து கொண்டிருந்த தீ அவர் மீது விழுந்தது.

    இதையடுத்து டிராக்டரை விட்டுவிட்டு வெளியில் ஓடி வந்தார். இதில் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

    தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. டிராக்டர்கள் தீயில் எரிந்து நாசமானது.

    இதேபோல் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் பழனிச்சாமி (55) என்பவர் கூரையின் மீது தகரம் வேய்ந்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவில் இவரது வீட்டின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

    இதை பார்த்து உள்ளே படுத்திருந்தவர்கள், கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். அதற்குள் வீடு முழுவதும் தீ பரவி, அதிலிருந்த 10 மூட்டை அரிசி, ரூ.30,000, பிரிட்ஜ், பீரோ, கட்டில் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கடந்த சில நாட்களாக பரமத்திவேலூர் பகுதியில் தொடர்ந்து தீ வைப்பு சம்பவங்களும், பெட்ரோல் குண்டு வீசும் சம்பவமும் நடந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதையடுத்து பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 250-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ×