search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North korea otto warmbier"

    ஓட்டோ வாம்பியருக்கு சிகிச்சை அளித்த வகையில் தங்களுக்கு 2 மில்லியன் டாலர் பணம் தர வேண்டும் என, வடகொரிய அரசு, அமெரிக்காவுக்கு பில் அனுப்பி உள்ளது. #NorthKorea #OttoWarmbier
    பியாங்யாங்:

    அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான ஓட்டோ வாம்பியர், கடந்த 2015-ம் ஆண்டு வடகொரியாவுக்கு கல்வி சுற்றுலா சென்றார். அதன் பின்னர் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் வடகொரியாவில் புறப்பட இருந்த நிலையில், பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

    வடகொரியா குறித்த ரகசிய தகவல்களை திருடியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட ஓட்டோ வாம்பியர் கோமா நிலைக்கு சென்றார். அதன் பின்னர் அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் பேரில், ஓட்டோ வாம்பியர் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டு, 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி அமெரிக்கா அனுப்பிவைக்கப்பட்டார்.

    ஆனால் அமெரிக்கா வந்து சேர்ந்த சில நாட்களில் கோமா நிலையிலேயே ஓட்டோ வாம்பியர் பரிதாபமாக இறந்தார். வடகொரியாவில் அவர் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் வடகொரியா அதனை மறுத்தது.

    இந்த நிலையில், ஓட்டோ வாம்பியரின் மருத்துவ சிகிச்சைக்காக தாங்கள் செலவு செய்த 20 லட்சம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.14 கோடியே லட்சத்து 23 ஆயிரம்) திருப்பி தரும்படி அமெரிக்காவை வடகொரியா வலியுறுத்தி உள்ளது. இதற்கான பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டோ வாம்பியரை அவரது நாட்டிற்கு அனுப்பும் முன்னரே அவரின் மருத்துவ செலவுகளை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்று, வடகொரியா கேட்டதாகவும், அதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. #NorthKorea #OttoWarmbier
    ×