search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "noose work"

    போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்க தீர்மானித்துள்ள நிலையில் குற்றவாளிகளை தூக்கிலிட்டு கொல்ல ஆள்தேர்வில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. #Noosework #SriLankacapitalpunishment #twohangmen
    கொழும்பு:

    தீவு நாடான இலங்கையை வெள்ளையர் ஆண்டு வந்த 1815-ம் ஆண்டு வாக்கில் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தவர்களுக்கு ராஜதுரோக குற்றச்சாட்டின் பேரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

    பின்னர், வெள்ளையர் ஆட்சியில்  சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு தூக்கு தண்டனையை ரத்து செய்து அந்நாள் பிரதமர் பண்டாரா நாயகே உத்தரவிட்டார். 

    பயங்கரவாத தாக்குதலில் பண்டாரா நாயகே கொல்லப்பட்ட பிறகு 1959-ல் மீண்டும் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்ட இந்த சட்டம் 2004-ம் ஆண்டு நீதிபதி சரத் அம்பேப்பிட்டியா சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை உயிர்ப்புடன் உள்ளது. 

    கடந்த 1976-ம் ஆண்டில் இருந்து இதுவரை இலங்கையில் யாரும் தூக்கிலடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட 356 கைதிகள் தூக்கு மர நிழலில் சிறைக்குள் இளைப்பாறி வருகின்றனர். 

    கைதிகளை தூக்கிலிடும் கொலையாளிகள் பணிஓய்வு பெற்று செல்வதால் அந்த வேலைக்கு புதிய நபர்களை தேர்வு செய்ய முடிவெடுத்த இலங்கை சிறைத் துறை கடந்த 2013-ம் ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 

    இந்த வேலைக்கு அப்போது விண்ணப்பித்த 176 பேரில் இறுதியாக 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் நியமன உத்தரவுக்குப் பின்னர் மாதங்கள் ஆகியும் வேலைக்கு திரும்பவே இல்லை. இதனால் தேர்வுப் பட்டியலில் இருந்த மூன்றாவது தகுதியான நபரை வரவழைத்த சிறைத்துறை அதிகாரிகள் அவருக்கு ஒரு வாரம் பயிற்சி அளித்தனர். 

    தூக்கு மேடையை சுற்றிக்காட்டி தூக்கு கயிறு எவ்வாறு கழுத்தில் இறுகும் என்று விளக்கிக் கூறியபோது அதிர்ச்சி அடைந்த அந்த நபரும் "இந்த வேலை எனக்கு வேண்டாம்" என்று கூறி ஓட்டம் பிடித்தார். 
    இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்க இலங்கை தீர்மானித்துள்ள நிலையில் குற்றவாளிகளை தூக்கிலிட்டு கொல்ல ஆள்தேர்வில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

    இலங்கையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை களையெடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில் போதைப் பொருள் சார்ந்த குற்றச்செயல்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க முடிவு செய்தது. 

    இந்த முடிவிற்கு இலங்கை அமைச்சரவை சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றும் அரசின் முடிவுக்கு சர்வதேச பொதுமன்னிப்பு சபை மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இருப்பினும், அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதால், போதைப்பொருள் வழக்கில் கைதாகி, மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் 18  குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்டரீதியான பணிகளை அரசு தொடங்கி உள்ளது. 

    இதனால் புதிதாக இரு கொலையாளியை தேர்வு செய்யும் முயற்சியில் இலங்கை சிறைத்துறையினர் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இலங்கை சிறைத்துறை செய்தியாளர் துஷாரா உப்பில்டேனியா, 'மரண தண்டனையை நிறைவேற்ற அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து காலியாக உள்ள இந்த கொலையாளி பணிக்கு ஆள்தேர்வு நடைபெறும்’ என இன்று தெரிவித்துள்ளார்.

    அடுத்த வாரம் இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நடைபெறும். தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Noosework #SriLankacapitalpunishment #twohangmen
    ×