search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Intelligence Agency Investigation"

    கேரளாவில் லட்சக்கணக்கில் கள்ளநோட்டு அச்சடித்ததாக மலையாள டி.வி. நடிகை சூர்யா உள்பட கைதானவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள சொகுசு பங்களாவில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி அந்த வீட்டில் கள்ள நோட்டு அச்சிட்டதாக மலையாள டி.வி. நடிகை சூர்யா, அவரது தாயார் ரமாதேவி, தங்கை சுருதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக லியோ, ரவீந்திரன், கிருஷ்ணகுமார், வினு, சன்னி ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலக்காட்டை சேர்ந்த பிஜூ என்ற போலி சாமியாரின் தொடர்பு நடிகை சூர்யாவுக்கு கிடைத்து உள்ளது. அவர் மூலமே கள்ள நோட்டு கும்பல் அவருக்கு அறிமுகமாகி உள்ளது. அவர்கள் உதவியுடன் தனது வீட்டில் நடிகை சூர்யா கள்ள நோட்டுகளை அச்சடித்து உள்ளார்.

    தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய போலி சாமியார் பிஜூ மற்றும் கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையில் இந்த கள்ள நோட்டு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (ஐ.என்.ஏ.) விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த அமைப்பின் அதிகாரிகள் கேரளா வந்தனர். அவர்கள் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை பகுதியில் தங்கள் விசாரணையை தொடங்கினார்கள். நடிகை அச்சடித்த கள்ள நோட்டுகள் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களிலும் புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது. அதுபற்றியும் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சூர்யா நடிகை என்பதால் அவர் கள்ள நோட்டுகளை சினிமா துறையிலும் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
    ×