search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namma School Foundation"

    • ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினர்.
    • பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக வழங்கப்பட்டது.

    சென்னை:

    பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.

    முதலமைச்சர் 19.12.2022 அன்று நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்தைத் தொடங்கி வைத்து. அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை விடுத்தார். முதலமைச்சர் இவ்விழாவிலேயே ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

    இந்தக் கோரிக்கையை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தினை நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டன்ற உறுப்பினர் பி. அப்துல் சமது ஆகியோரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கு. சின்னப்பா, எம். பூமிநாதன், டாக்டர் டி. சதன் திருமலைகுமார், ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோரும் தங்களது ஒருமாத ஊதியத்திற்கான காசோலைகளையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. சின்ராஜ் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர்.

    • ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வேணு. சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன.
    • மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'தமிழ்ச் சமூகத்துக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்' என நினைக்கும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்று சேர்த்து அரசுப் பள்ளிகளை நோக்கி அவர்களின் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வேணு. சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன.

    இதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து அந்த பொறுப்புக்கு கல்வியில் அனுபவமும் அக்கறையும் கொண்ட ஒருவரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும்.

    மாவட்ட அளவில் இதற்கென அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது. மாநில அளவிலான குழுக்களிலோ, மாவட்ட அளவிலான குழுக்களிலோ மக்கள் பிரதிநிதிகள் எவரும் இடம்பெறவில்லை. கல்வியில் ஈடுபாடு கொண்ட மக்கள் பிரதிநிதிகளை மாநில, மாவட்ட அளவிலான குழுக்களில் இடம்பெறச் செய்வது மிக மிக அவசியமாகும்.

    ஆதிதிராவிட நலப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் பள்ளியைத் தத்தெடுக்கவோ நன்கொடை அளிக்கவோ முன்வருகிறவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளியைத் தேர்வு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அந்தப் பள்ளிகள் விடுபட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படாமல் அந்தப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

    அடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயக பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×