search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manchuk Mandavia"

    • அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள் தான்.
    • நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் நடந்த இந்தி ஆலோசனைக்குழு கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசும் போது, "நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. மேலும் நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை வழங்குகிறது. மாநில மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தலாம். ஆனால் இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும். நமது தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக இந்தியை சுகாதார அமைச்சகம் அங்கீகரிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

    அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள் தான். அவற்றை மக்கள் பேசுவதற்கான மொழிகள் மட்டுமே என்று மத்திய மந்திரி சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது. மத்திய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை மட்டும் தேசிய மொழி என்று அங்கீகரிப்பதும், இந்தி மொழியைத் திணிப்பதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்ட்ர செயல் திட்டத்தை பா.ஜ.க. அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வேலையாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×