search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malaysi sand"

    தமிழ்நாட்டில் மணல் தேவை அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மலேசியாவில் இருந்து மீண்டும் மணல் இறக்குமதி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. #SandImport #EnnorePort

    சென்னை:

    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான தொழில் மிகவும் தேக்கம் அடைந்துள்ளது.

    மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பலில் மணல் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த மணல் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் வாங்குவதற்கு வசதியாக இருந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவில் இருந்து எண்ணூர் துறைமுகத்துக்கு 50 ஆயிரம் டன் மணல் கப்பலில் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டது.

    ஒரு யூனிட் மணல் ரூ.10,350-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. லாரி உரிமையாளர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து மலேசிய மணலை வாங்கி வந்தனர்.

    எண்ணூர் துறைமுகத்தில் தற்போது 500 லாரி அளவுக்குத்தான் மணல் உள்ளது. இதுவரை புக்கிங் செய்தவர்களுக்குத்தான் இந்த மணலை விற்க முடியும் என்பதால் நேற்று மதியம் ஆன்-லைன் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. இனி மேல் மணல் வந்தால்தான் மீண்டும் முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மணல் தேவை அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மலேசியாவில் இருந்து மீண்டும் மணல் இறக்குமதி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. அனேகமாக இன்னும் 10 நாளில் கப்பலில் மணல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    கடந்த முறை இறக்குமதி செய்யப்பட்ட மணலை விட இந்த முறை 2 மடங்கு அதிகம் மணல் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. 1 லட்சம் டன் அளவுக்கு மலேசிய மணலை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த முறை வீடு தேடி மணல் வினியோகம் செய்யும் நடைமுறையும் தொடங்கி வைக்கப்படும் என தெரிகிறது.

    இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

    மலேசிய மணல் தூத்துக்குடி, எண்ணூருக்கு வருவதால் இந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும் விலையில் மணல் கிடைக்கிறது.

    கோவை, திருச்சி, சேலம், தர்மபுரி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு மணல் கிடைப்பது அரிதாக உள்ளது. ஏராளமானவர்கள் மணல் கேட்டு காத்திருக்கிறார்கள்.

    மணல் லாரி உரிமையாளர்கள் 41 ஆயிரம் லாரிகளுக்கு பணம் செலுத்திவிட்டு காத்திருப்பதால் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு வருகிற 19-ந்தேதி லாரிகளுடன் காத்திருப்பு போராட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #SandImport #EnnorePort

    ×