search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumarapalayam employee murder"

    குமாரபாளையம் அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற தனியார் நிறுவனரை கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தம்மண்ணசெட்டி தெருவை சேர்ந்தவர் அரவிந்தன் என்ற தினேஸ்வரன் (வயது 24). திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 14-ந் தேதி திருமண நிகழ்ச்சிக்கு ஒன்று சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர், உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் அரவிந்தனை, அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், அவருடைய தம்பி கிருஷ்ணராஜ் இருவரும் அடித்துக்கொலை செய்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெங்கடேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நானும், அரவிந்தனும், ஒரே பகுதியில் வசித்து வந்ததால் நண்பர்களாக இருந்தோம். எனது மனைவியிடம், அரவிந்தன் தகாத முறையில் நடக்க முயன்றதாக எனக்கு தெரியவந்தது.

    இதனை அறிந்த நான், எனது தம்பி கிருஷ்ணர ராஜியுடன் சென்று அரவிந்தனை அழைத்து தட்டி கேட்டேன். அப்போது தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த நானும், கிருஷ்ணராஜியும் சேர்ந்து அரவிந்தனை தாக்கினோம். இதில் அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அரவிந்தன் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி பழையபாளையம் பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள காவிரி ஆற்றில் வீசினோம். அதன்பிறகு ஒன்றும் தெரியாதது போல் இருந்தோம். ஆனால் போலீசார் எங்களை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர். இவ்வாறு வெங்கடேஷ் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

    காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. எனவே அரவிந்தன் உடல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கும். இதனால் உடலை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள், ரப்பர் படகு மூலமாக அரவிந்தன் உடலை தேடி வருகிறார்கள். 


    ×