என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodaikanal Farmers"

    கள்ளக்கிணறு பகுதிகளில் அமைத்த இரும்பு பாலம் போல் தங்கள் பகுதியிலும் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, பாரதிஅண்ணாநகர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் பொருட்களை தலைச்சுமையாக சுமந்து பெரியாற்றை கடந்து வருகின்றனர். கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்றும் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. இதனால் பெரியாற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

    விவசாயிகள் விளைபொருட்களை தலைச்சுமையாக ஆற்றை கடந்து செல்கின்றனர். தற்போது அதிகளவு தண்ணீர் வருவதால் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமம் அடைகின்றனர். கள்ளக்கிணறு பகுதிகளில் அமைத்த இரும்பு பாலம் போல் தங்கள் பகுதியிலும் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை பெய்யும் பொழுது ஆபத்தான முறையிலேயே ஆற்றை கடந்து வருவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டாட்சியர் முருகேசனிடம் கேட்டபோது இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்றார்.
    அவக்கோடா பழங்களுக்கு குறைந்த அளவில் பராமரிப்பு செலவுகள் இருப்பதால் எங்களுக்கு நிறைவான லாபம் கிடைக்கிறது என்று கொடைக்கானலில் விவசாயிகள் கூறினர்.
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பிளம்ஸ், பேரிக்காய் விவசாயத்தை அடுத்து வெண்ணைப் பழம் என்று அழைக்கப்படும் அவக்கோடா பழங்கள் முக்கிய இடத்தை பெற்று வருகிறது.

    செண்பகனூர், பள்ளங்கி, மாட்டுப்பட்டி, வில்பட்டி உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் கடந்த 5 வருடங்களாக இந்த பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு வருகின்றன.

    கேன்சர், தோல் வியாதி ஆகிய நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ள இந்த பழங்கள் அழகு சாதனப் பொருட்களிலும் சேர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு விளைவிக்கப்படும் பழங்கள் வெளி மாநிலங்கள் முதல் வெளிநாடுகள் வரையில் ஏற்றுமதி செய்யப்படுவதாக அவக்கோடா வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த பழங்களின் மகசூல் குறித்து விவசாயிகள் கூறும் போது, மரக்கன்று வைத்து 5-வது வருடம் முதல் பழங்கள் காய்க்கத் தொடங்கும். இந்த மரங்களை பராமரிப்பது மிகவும் எளிதாக உள்ளது.

    பராமரிப்புச் செலவுகளும் மிகக் குறைவாகவே உள்ளது. சந்தைக்கு நாங்களே கொண்டு சென்று விற்பனை செய்யும் போது ஒரு கிலோ அவக்கோடா பழங்கள் ரூபாய் 100 முதல் 150 வரையில் கிடைக்கிறது. வியாபாரிகள் எங்களிடம் வாங்கும் போது ரூபாய் 75 முதல் வாங்குகின்றனர்.

    குறைந்த அளவில் பராமரிப்பு செலவுகள் இருப்பதால் எங்களுக்கு நிறைவான லாபம் கிடைக்கிறது என்று கூறினர். இதன் காரணமாக ப்ளம்ஸ், பேரிக்காய் பழங்களை அடுத்து விவசாயிகள் அவக்கோடா பழங்களை மகசூல் செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறினர்.

    ×