search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kishore K Swamy"

    • மக்களுக்கு திமுக மீது மிகப்பெரிய நம்பிக்கை எல்லாம் கிடையாது என்கிறார் கிஷோர் கே.சாமி
    • திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பல்வேறு துறைகளை கபளிகரம் செய்துவிட்டு போகும் என குற்றச்சாட்டு

    சென்னை:

    அரசியல் விமர்சகர் கிஷோர் கே.சாமி மாலை மலர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இந்த சமூகத்திற்கு தேவையில்லாத ஆணி. நம் சமூகத்திற்கு அறவே இருக்கக்கூடாது என்று நினைக்கக்கூடிய இயக்கமாக பார்ப்பதால் திமுக மீது தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்துகிறேன். என் சிறு வயது முதலே இருக்கும் எண்ண ஓட்டம்தான் அது. அவர்களின் செயல்பாடுகளும் அந்த மாதிரிதானே இருக்கிறது. அதை நோக்கித்தானே போகிறது.

    திமுகவின் தோற்றம் முதல் அதன் செயல்பாடுகள், சிந்தனைகள், பேசும் விஷயங்கள் அல்லது செயல்படுத்தும் விஷயங்கள் எல்லாமே பொருத்தம் இல்லாமல் இருக்கும். அவர்களின் செயல்பாடுகள் எல்லாமே முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. அதனால் மக்கள் பெருவாரியான ஆண்டுகள் அவர்களுக்கு ஆளும் வாய்ப்பை வழங்கவில்லை என்று சொல்லலாம்.

    இவர்கள் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும்கூட, கடந்த தேர்தலில் 13 கட்சி கூட்டணியை வைத்துக்கொண்டு, மோடி எதிர்ப்பு என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, வானத்தையே வில்லாக வளைப்பேன் என்று சொல்லியும்கூட, மூன்று சதவீதம், மூன்றரை சதவீத வித்தியாசத்தில்தான் ஆட்சியில் அமர்ந்தார்கள். எனவே, மக்களுக்கு திமுக மீது மிகப்பெரிய நம்பிக்கை எல்லாம் கிடையாது.



    பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பெரிய பேசுபொருளாக இருக்கிறார். திமுக எதிர்ப்பு என்பதில் அவர் இதுவரை எந்த சமரசமும் செய்வதில்லை. அது மட்டும்தான் அவருக்கான ஈர்ப்பை கொடுக்கிறது.

    முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை மக்கள் எப்படி மதிப்பீடு செய்கிறார்கள்? என்பதை வரும் தேர்தலில்தான் பார்க்க முடியும். இவர்கள் சொன்னது என்ன? செய்தது என்ன? தேர்தலுக்கு முன்பு என்னென்ன பேசினார்களோ? எதையெல்லாம் எதிர்த்தார்களோ அவற்றுக்கெல்லாம் சைலண்டாக ஒப்புதல் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, 8 வழிச்சாலை திட்டத்தை, விரைவுச் சாலை என பெயர் மாற்றம் செய்வது, எடப்பாடி பழனிசாமி கொணடுவந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதை தவிர்த்து புதிதாக இதை இவர் செய்தார்? என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது?

    எம்எல்ஏக்கள் அமைச்சரை பாராட்டியோ அல்லது எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் முதல்வரை பாராட்டியோ பார்த்திருக்கலாம். ஆனால், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சேர்ந்து ஒரே ஒரு எம்எல்ஏவுக்கு (உதயநிதி) வணக்கம் வைப்பது, கிட்டத்தட்ட காலிலேயே விழுந்து கிடப்பதை இப்போதுதான் பார்க்கிறோம். உதயநிதியின் தனித்துவம் என எதுவும் இல்லை. அவரது அரசியல் பேச்சை பார்த்தால் தெரியும், அவர் மிகவும் அசவுகரியமாக உணர்வதை காண முடியும். அதுவே திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு போகும்போது பார்த்தால், சவுகரியமாக உணர்கிறார். எனவே, அவருக்கு பிடித்த வேலை அதுவாக இருந்தால் அதையே செய்துகொண்டு போகலாம். அதைவிடுத்து அரசியலில் ஒரு கால், இங்கே ஒரு கால் என வைக்கும்போது, அதை தவறு என சொல்ல முடியாது. அதில் அவரால் முழுமையான அர்ப்பணிப்பை காட்ட முடியவில்லை என்பறு தெரிகிறது.

    ஓராண்டில் திமுக அரசின் சாதனை என்று எதையும் சொல்ல முடியாது. உலக நாடுகளில் இருந்து தடுப்பூசி கொண்டு வருவோம் என்றார்கள். எந்த நாட்டில் இருந்து இவர்களால் கொண்டு வர முடிந்தது? உக்ரைனுக்கு தலைவர்களை அனுப்பி, அங்கு சிக்கித் தவிப்பவர்களை அழைத்து வருவோம் என்று கதையடிப்பது போன்ற காமெடி சீன்தான் ஒரு வருடமாக நடந்துகொண்டிருக்கிறது. புரட்சிகரமாக ஒரு சாதனையை சொல்ல முடியுமா?

    சொன்ன எதையும் உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஆயிரம் சாக்குபோக்கு சொல்கிறீர்கள். ஹைட்ரோ கார்பனை பற்றி பேசினார்கள், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று பேசினார்கள். இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. திட்டத்துக்கான வரைவும் கொடுத்து புதிய திட்டத்துக்கான கலந்தாலோசனைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதை தடுக்க இந்த அரசாங்கம் எதாவது செய்ததா? ஸ்டெர்லைட் தொடர்பாக நீதிமன்றத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடு என்ன? விளக்குவாரா ஸ்டாலின்? இப்படி எதை எடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்த எல்லாவற்றையுமே, இவர்கள் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

    ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும்போது பல்வேறு துறைகளை கபளிகரம் செய்துவிட்டு போகும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதை சரி செய்வதற்கு முதல் இரண்டு ஆண்டுகள் போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×