search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KEPT HOME"

    • திருச்சி அருகே விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
    • மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்

    திருச்சி:

    தமிழகம் முழுவதும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை முற்றிலும் தடுத்து நிறுத்துமாறு போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் சிறப்பு பிரிவினர் குட்கா விற்பனை குறித்து அதிரடி ஆய்வு நடத்தி குற்றவாளிகளை கைதும் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு கூட்டுறவு சங்கம் அருகே உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வளநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் இன்று வளநாடு போலீசார் சென்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் பாலன் (வயது 29) என்பவர் குட்கா பொருட்களை பல்வேறு இடங்களில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதோடு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 43 மூட்டையில் உள்ள சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    திருச்சியில் இருந்து வாங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் இவ்வளவு குட்கா பொருட்கள் எங்கிருந்து வந்தது, எங்கெல்லாம் விற்பனை நடைபெறுகிறது, யார், யாரெல்லாம் இந்த விற்பனையில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×