search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalika parameshwari temple trichy"

    பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாக அருள்பாலிக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரியின் ஆலயம், திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாக அருள்பாலிக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரியின் ஆலயம், திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி உள்ளது. ஆலய முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும் மகா மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்தின் நடுவே கொடி மரமும், பஞ்சமுக பலிபீடமும், சிங்க வாகனமும் இருக்கின்றன. இங்கு இருக்கும் பலிபீடம் ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இதேபோல் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

    அடுத்து சிம்ம வாகனம் உள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் முருகப்பெருமான், கிழக்கில் பைரவர், வட கிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். வலதுபுறம் விராட் விஸ்வபிரம்மன் வீற்றிருக்கிறார். திருச்சுற்றில் மேற்கில் துர்க்கை அம்மன் 18 கரங் களுடன் அருள்புரியும் அழகு நம்மை சிலிர்க்க வைக்கக்கூடியது. இந்த துர்க்கை அஷ்ட தசபுஜ துர்க்கை என அழைக்கப்படுகிறாள். கன்னிமூலை கணபதி, ஆஞ்ச நேயர், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருமேனிகளும் உள்ளன.

    அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலில் துவார சக்திகள் அருள்பாலிக்க, அடுத்து கருவறையில் அன்னை காளிகா பரமேஸ்வரி அமர்ந்த நிலையில் முகத்தில் இளநகை தவழ கருணை ததும்பும் கண்களுடன் அமர்ந்துள்ளாள். காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த அன்னைக்கு, நான்கு கரங்கள். கரங்களில் டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை சுமந்து காட்சி தரும் அன்னையின் கழுத்தில் திருமாங்கல்யம் இருப்பது மிகவும் சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. விக்கிரகத்தின் அமைப்பிலேயே தாலிச் சரடு இருப்பது எங்கும் காண இயலாத அற்புத அமைப்பு என்கின்றனர் பக்தர்கள்.

    அன்னையிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ளும் வழக்கம் இங்கு உள்ள பெண்களிடம் உள்ளது.

    இந்த ஆலயத்தின் தலபுராணம் அன்னை இங்கு வந்த கதையை சொல்கிறது.

    நிராலம்ப மகரிஷி பாரத தேசத்தில் பல இடங்களில் தவம் செய்த பின், கடைசியாக இவ்வூருக்கு வந்தார். இங்கு காவிரி நதியின் தென் கரையில் பூமியில் பாதம் படாதபடியும், அந்தரத்தில் எந்தவொரு பிடிமானமும் இல்லாமலும் நின்று, அந்தர்யோக முறையில் அன்னையை நோக்கி தவம் செய்யத் தொடங்கினார். அவரது தவத்தைக் கண்டு மனம் இளகிய பராசக்தியானவள், ஸ்ரீகாளிகா பரமேஸ்வரியாக அவருக்கு அந்தரத்தில் காட்சி தந்தாள்.

    அந்த காட்சியை கண்டுகளித்த நிராலம்ப மகரிஷியிடம் என்ன வரம் வேண்டுமென அன்னை வினவினாள்.

    “ஜெகன் மாதாவாகிய தாங்கள் இந்தக் கலியுகத்தில் மனித குலம், சத்தியம், தர்மம், நீதி, நேர்மை, ஒழுக்கம் முதலான நன்னெறிகளில் இருந்து விலகி பாவச் செயல்களைச் செய்து, பஞ்ச மாபாதகங்களால் பீடிக்கப்பட்டு, நிம்மதியும், சுகமுமின்றி வேதனையோடு நரக வாழ்க்கை வாழும் போது அவர்களை கருணையோடு பார்த்து தாயுள்ளத்தோடு அவர்களது பாவங்களை எல்லாம் போக்க வேண்டும். அவர்களை அன்போடு அரவணைத்து அவர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் வழங்கி அவர்களை வாழ வைக்க வேண்டும்” என்று நிராலம்ப மகரிஷி வேண்ட, அன்னை காளிகா பரமேஸ்வரியும் “அப்படியே அருள்கிறேன்” என அனுக்கிரகம் செய்தாள்.

    நிராலம்ப மகரிஷிக்கு அம்பாள் காட்சி கொடுத்த இடமே இந்த ஆலயம் உள்ள இடம். உலகில் எங்கும் காண இயலாத பலிபீடம் இங்குள்ள பஞ்சமுக பலிபீடமாகும். ஐந்து முகங்களைக் கொண்ட இந்த பலிபீடம், நிராலம்ப மகரிஷியால் அற்புத சிற்ப வேலைப்பாடுகளுடன் இவ்வையகத்து மக்கள் அன்னையின் கருணையால் வளமாக வாழ வேண்டி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

    இங்கு அன்னையின் சன்னிதியின் முன் மாத அமாவாசை தோறும் சூலினி பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெறுகிறது. இதில் பலநூறு பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் பில்லி, சூனியம் விலகும் என்பதும், கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என்பதும் நம்பிக்கை.

    சுமார் 800 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இரவு நேரங்களில், நடுநிசியில் சன்னமான கொலுசு சப்தத்தை இந்த பகுதி மக்கள் கேட்டதுண்டு. கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அன்னை இரவில் உலா வருவதால் ஏற்படும் சப்தம் இது என்கின்றனர் கேட்டவர்கள்.

    இங்குள்ள அஷ்டதச புஜ துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து வழிபட, தடைபட்ட திருமணம் விரைவாக நடைபெறும் எனவும், மழலைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

    இந்த ஆலயம் தேசிய ஒருமைபாட்டின் சின்னமாய் விளங்குகிறது என்று சொல்வது மிகையாகாது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    தன்னை நாடுவோரின் துயர் நீக்கி அவர்களை வளமுடனும் மகிழ்வுடனும் வாழவைப்பதில் அன்னை காளிகா பரமேஸ்வரிக்கு நிகரில்லை என்பது உண்மையே.

    அமைவிடம் :

    திருச்சியின் மத்தியப் பகுதியில் பெரிய கம்மாளத் தெருவில் உள்ளது இந்த ஆலயம். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கு, நகரப்பேருந்தில் மரக்கடை மற்றும் காந்தி மார்க்கெட் வரை பயணித்து, அதன்பிறகு நடந்தே சென்று விடலாம்.

    ஜெயவண்ணன்
    ×