search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Interpol Red Corner Notice"

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் விரைவில் ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று செலுத்தாமல் மோசடி செய்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இது தொடர்பாக நிரவ்மோடி, அவரது உறவினர் மொகுல் சோக்ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இருவரும் கடந்த ஜனவரி மாதமே இந்தியாவை விட்டு தலைமறைவாகி வெளிநாடு சென்றனர். அவர்களது சொத்துக்கள், வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை முடக்கி சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்தது.

    இதற்கிடையே நிரவ் மோடி இங்கிலாந்தில் தங்கி இருப்பதாகவும், அந்நாட்டில் அடைக்கலம் கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அவரை பிடிக்க இன்டர்போல்(சர்வதேச) உதவியை சி.பி.ஐ. நாடியது.

    நிரவ் மோடிக்கு எதிரான ஆவணங்களை இன்டர்போலுக்கு சி.பி.ஐ. அனுப்பி வைத்தது. அவர் மீது மும்பை கோர்ட்டு பிறப்பித்த ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட் மற்றும் வழக்கின் குற்றப்பத்திரிகை விவரங்களை சி.பி.ஐ. கொடுத்தது.

    மேலும் இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இன்டர்போல் கூட்டு அமைப்புக்கு பலமுறை சி.பி.ஐ. நினைவூட்டல் கடிதமும் எழுதியது.

    இந்த நிலையில் நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் விரைவில் ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சி.பி.ஐ. அளித்துள்ள ஆவணங்களை இன்டர்போல் ஆய்வு செய்தது. இந்த ஆவணங்கள் குறித்து திருப்தி தெரிவித்தது. நிரவ்மோடிக்கு எதிரான ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதால் இன்டர்போல் இன்றோ அல்லது அடுத்த வாரம் தொடக்கத்திலேயோ ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்து இன்டர் போலிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இவர்கள் விமான நிலையம் வந்து வேறு நாட்டுக்கு செல்ல முடியாது. விமான நிலையத்திலேயே கைது செய்யப்படுவார்கள்.

    இதேபோல நிரவ் மோடியின் உறவினர் மொகுல் சோக்ஷிக்கு எதிராகவும் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

    இதற்கிடையே நிரவ் மோடியிடம் பல பாஸ்போர்ட்டுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று ஆலோசிக்கிறார்கள்.

    ×