search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal buildings"

    சட்டவிரோத கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர்-மின் இணைப்பை துண்டித்து, அதை பிறருக்கு வழங்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt #DrinkingWater
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம், சென்னீர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் உள்பட சிலர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தங்களின் நிலங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, ‘மனுதாரர்களின் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு பட்டா கேட்பதால், அவர்களது கோரிக்கையை நிராகரித்து கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கில் ஐகோர்ட்டு தடை எதுவும் விதிக்காத பட்சத்தில், தங்கள் முன்புள்ள கோரிக்கை புகார் மனுவை அதிகாரிகள், வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி முடித்து வைக்கக்கூடாது.

    ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். விரைவில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது. எனவே, இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கும், சட்டவிரோத கட்டிடங்களுக்கும் வழங்கப்படும் குடிநீர் இணைப்பை துண்டித்து, அந்த குடிநீரை வேறு நபர்களுக்கு வழங்கலாம். இந்த வழக்கை முடித்துவைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    ×