search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IIT Students Missing"

    இமாச்சலபிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 35 ஐ.ஐ.டி மாணவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. #HimachalRains
    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அது அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுலா தளமான குலு, மனாலியில் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மனாலியை இணைக்கும் சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் மனாலி நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    குலு, மனாலியில் சுமார் 2 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். அவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாதபடி மனாலியில் முடங்கி உள்ளனர்.

    பியாஸ் நதியில் நேற்று ஒரு பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இமாச்சலபிரதேசத்தில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகி விட்டனர்.

    இதையடுத்து வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை ராணுவம் மீட்டு வருகிறது. இன்று இமாச்சலபிரதேசத்தில் பல இடங்களில் மழை பெய்ததால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே இமாச்சலபிரதேசத்தில் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டவர்களின் கதி என்ன ஆயிற்று என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. ரூர்கேசா ஐ.ஐ.டி.யில் இருந்து 35 மாணவர்கள் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள லகுல் மலையில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.



    அந்த 35 மாணவர்களும் திடீரென காணாமல் போய் விட்டனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்ட மேலும் 20 பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இமாச்சலபிரதேசத்தில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையில் மிக கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பள்ளி-கல்லூரிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவும் மக்களை வாட்டியுள்ளது. இதற்கிடையே மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. #HimachalRains

    ×