search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Identity Card Aadhaar No"

    • தஞ்சை மாவட்டத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
    • தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களும் செல்போன் எண்ணிற்கே கிடைக்கும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர் களாலும் தாசில்தார் அலுவலகங்களிலும் படிவம் 6பி-ல் வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 20 லட்சத்து 37 ஆயிரத்து 651 வாக்காளர்களில் 13 லட்சத்து 5 ஆயிரத்து 947 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    பொதுமக்கள் வசதிக்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதே போல் அடுத்த மாதம் 5-ந் தேதியும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சிறப்பு முகாம்கள் நடைபெறாத நாட்களில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை தாசில்தார்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், செல்போன் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இவற்றின் மூலம் தங்களை செல்போன் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களும் செல்போன் எண்ணிற்கே கிடைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×