search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hosur assembly"

    பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலி இடம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #BalakrishnaReddy

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்ததால் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களது பதவியை பறித்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

    இதனால் பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஒட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பிரெட்டிபட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திக்குளம் ஆகிய 18 தொகுதிகள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

    இதன் காரணமாக தமிழக சட்டசபையில் 20 இடங்கள் காலியாக உள்ளன. இந்த 20 இடங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் அ.தி.மு.க. அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி சமீபத்தில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அவரது மந்திரி பதவியும், எம்.எல்.ஏ. பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு நகல் சட்டசபை செயலாளருக்கு சமீபத்தில் கிடைத்தது.


    இதைத் தொடர்ந்து பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலி இடம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கு கடிதம் மூலம் இதை சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் தற்போது செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    ஓசூர் தொகுதியும் காலி இடம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் தமிழகத்தில் காலியான சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    21 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் இது மினி சட்டசபை தேர்தல் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதியில் இந்த 21 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்பது தெரிய வந்துவிடும்.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார்.

    இது தொடர்பான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. #BalakrishnaReddy

    ×