search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gummidipoondi fishermen family"

    கும்மிடிப்பூண்டியை அடுத்த வல்லம்பேடு மீனவ கிராமத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட 28 மீனவ குடும்பத்தினர் இரண்டு ஆண்டுக்கு பிறகு ஊர் திரும்பி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த வல்லம்பேடு மீனவ கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். ஏராளமான வீடுகள் நொறுக்கப்பட்டன.

    இதில் கொலை வழக்கில் தொடர்புடையதாக 28 குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் ஊருக்குள் வரக்கூடாது என்றும் எச்சரித்தனர்.

    இதையடுத்து 28 குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 108 பேரும் சொந்த கிராமமான வல்லம்பேடு குப்பத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் ஆரம்பாக்கத்தை அடுத்த நொச்சிக்குப்பத்தில் உள்ள சமுதாய கூடத்திலும், வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்து இருந்தனர்.

    இதற்கிடையே தாங்கள் மீண்டும் வல்லம்பேடு கிராமத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து 28 குடும்பத்தினரும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவுப்படி, 28 குடும்பத் தினரையும் மீண்டும் அவர்களது கிராமத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் நடந்த பலகட்ட சமாதான பேச்சு வார்த்தைக்கு பின்னர் 28 குடும்பத்தினரும் மீண்டும் அவர்களது இடத்திற்கே செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நொச்சிக்குப் பத்தில் இருந்து 28 குடும்பத்தை சேர்ந்த 108 பேரும் இன்று காலை 3 வேன்களில் வல்லம்பேடு கிராமத்துக்கு பலத்த பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டனர்.

    அவர்களோடு பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், டி.எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் உடன் வந்தனர்.

    வல்லம்பேடு கிராமத்தில் அவர்கள் இறங்கியதும் மற்றொரு தரப்பை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

    அவர்கள், “28 குடும்பத்தினரும் ஊருக்குள் வரக் கூடாது, எங்கு இருந்தார்களோ அங்கேயே வசிக்க வேண்டும்” என்று கோ‌ஷம் எழுப்பினார்கள். மேலும் போலீசாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். இதைத் தொடர்ந்து 28 குடும்பத்தினரும் தாங்கள் ஏற்கனவே வசித்த வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களது வீடுகள் மிகவும் சேதம் அடைந்து இருந்தன. அதனை சரி செய்யவும், தண்ணீர் வசதி செய்து கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை நீடித்து வருகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க இரு தரப்பினரிடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    ×