search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "graduate who sprays crops with a drone"

    • காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பவானி ஆறு செல்வதால் இப்பகுதியில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • விவசாயத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் தான் செய்து வந்த பொறியியல் பணியை பாதியில் விட்டுவிட்டு தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் பெரும்பாலும் விவசா யத்திற்கு முக்கியத்துவம் உள்ள பகுதியாக உள்ளது.

    மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பவானி ஆறு செல்வதால் இப்பகுதியில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன்படி வாழை, கத்தரிக்காய், முள்ளங்கி, சுரைக்காய், தக்காளி, வெங்காயம், புடலைங்காய், கொத்தவரங்காய், அவரை, வெண்டை உள்ளிட்ட பல்வேறு நாட்டு காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது வனவிலங்கு தொல்லையாலும், விவசாய இடுபொருட்களின் விலை உயர்வாலும் விவசாய தொழிலை பலர் விட்டு விட்டு மாற்று தொழிலை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காமல் விவசாயம் பல இடங்களில் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

    இவ்வாறான சூழ்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே காரமடையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் டிரோன் எந்திரம் மூலம் மருந்து தெளிக்கும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறார்.

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஆசிரியர் காலனியை சேர்ந்த வாசுதேவன் மகன் தேவ்சந்த் (20). பொறியியல் பட்டதாரி. விவசாயத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் தான் செய்து வந்த பொறியியல் பணியை பாதியில் விட்டுவிட்டு தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளார்.

    சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாளப்பட்டி பகுதியில் இவருக்கு சொந்தமாக விளை நிலம் உள்ளது. அங்கு பல்வேறு பயிர்களை பயிரிட்டு பராமரித்து வருகிறார்.

    விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருந்ததால் நவீன முறையில் செயல்படுத்தப்பட்டு வந்த டிரோன் எந்திரம் மூலம் விளை நிலங்களுக்கு மருந்து தெளிக்கும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறார். இவர் இவரது தோட்டத்தில் முதன்முறையாக இது போன்று மருந்து தெளித்து வருவதை பார்த்த மற்ற விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கும் இதனை பயன்படுத்தி தருமாறு இவரிடம் கேட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர் ஒரு ஏக்கருக்கு ரூ.700 வீதம் ஊதியம் தொகை பெற்றுக் கொண்டு விளைநிலங்களுக்கு மருந்து தெளித்து வருகிறார்.

    இதன் மூலம் பயிர்களுக்கு தெளிக்கப்படும் மருந்துகளின் நச்சுத்தன்மை குறைவாக இருக்கிறது. இது மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகளுடைய மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொறியியல் பட்டதாரி தேவ் சந்த் கூறியதாவது:-

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை வட்டார பகுதியில் விவசாய பயிர்களுக்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்து இலை வழி உரம் ட்ரோன் மூலம் தெளிக்கப்படுகிறது. ட்ரோன் எந்திரம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து உரம் ஆகியவை தெளிப்பதால் ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீர் போதுமானது. 50 சதவீதம் வரை உரம் மருந்து செலவில் சேமிப்பாகிறது. ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மருந்து தெளிக்கலாம். ஆட்கள் கூலி சேமிப்பாகிறது . ஒரே சீரான தெளிப்பால் பயிர்கள் நன்றாக வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கிறது. நவீன ட்ரோன் மூலம் மருந்துகள் தெளிக்க விவசாயிகள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×