search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "generator"

    கரூரில் தூங்கும்போது ஜெனரேட்டர் புகை வீட்டினுள் முழுவதும் மண்டி, சுவாசிக்க முடியாமல் தூங்கிய நிலையிலேயே சுந்தரி, ராகவி மூச்சுதிணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கரூர்:

    கரூர் ராமானுஜம் நகர் வாய்க்கால்மேடு ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 48). தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுந்தரி(40). மகள் ராகவி(16), மகன்கள் ரஞ்சித்(14), ரகு(13). இதில் ராகவி சென்னையில் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார். வேட்டமங்கலத்தில் ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி ரஞ்சித் 9-ம் வகுப்பும், ரகு 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சமீபத்தில் வானிலை ஆராய்ச்சி மையம் “ரெட்அலர்ட்” அறிவிப்பு வெளியிட்டது. இதையொட்டி ராகவியை, கரூரிலுள்ள வீட்டுக்கு வந்தார்.

    இந்தநிலையில் ஜே.ஜே.நகரில் ஒரு மின்கம்பத்தில் வயர்கள் ஒன்றோடொன்று உரசி தீப்பொறி கிளம்பியதால், சில நாட்களுக்கு முன்பு பல்வேறு வீடுகளுக்கு மின்வினியோகம் தடைபட்டது. மின்வாரிய ஊழியர்கள் வயர்களை சரிசெய்து வீடுகளுக்கு மின்வினியோகம் செய்தனர். எனினும் ராஜா வீட்டுக்கு மின்வினியோகம் கிடைக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு தனது பழக்கடையில் இருந்த ஜெனரேட்டரை ராஜா வீட்டுக்கு எடுத்துவந்தார். அதிலுள்ள சுவிட்ச் பெட்டியிலிருந்து ஒரு டேபிள்பேனுக்கு மட்டும் இணைப்பு கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

    இதையடுத்து சுந்தரி, அவரது மகள் ராகவி ஆகியோர் கதவினை லேசாக மூடிவிட்டு தூங்கினர். மண்எண்ணெயில் இயங்கிய அந்த ஜெனரேட்டரில் இருந்து இரவு முழுவதும் கரும்புகை வெளியேறியது. வீட்டின் வாசல் அருகே டேபிள்பேன் சுற்றியதால், ஜெனரேட்டர் புகை வீட்டினுள் பரவியது. தூங்கி கொண்டிருந்த சுந்தரியும், ராகவியும் இதை உணரவில்லை. ஒரு கட்டத்தில் வீட்டினுள் முழுவதும் புகை மண்டி, சுவாசிக்க முடியாமல் தூங்கிய நிலையிலேயே சுந்தரி, ராகவி மூச்சுதிணறி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று காலை வீட்டுக்கு வந்த ராஜா, தனது மனைவி, மகள் பிணமாக கிடந்ததை பார்த்து, கதறி அழுதார்.

    இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    ×