search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha idols are consecrated at 2108 places"

    • 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
    • விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கோவை: 

    நாடு முழுவதும் நாளை (31-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

     

    இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவை நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ேகாவை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     

    இதுதவிர போலீசார் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதி, மேன்ஷன் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு போன்ற தங்கும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அனைத்து சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து வருகின்றனர். சந்தேகப்படும் நபா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     

    மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக, எந்த பிரச்சினையும் ஏற்படாத விதமாக கொண்டாட வேண்டும் என போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாத் அமைப்பு மற்றும் இந்து அமைப்பினரிடம் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து ேகாவை மாவட்டம் முழுவதும் 2108 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதற்காக புறநகரில் 1600 போலீசாரும் மாநகரில் 2000 போலீசாரும் என மொத்தம் 3600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை முதல் 5-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா மிக அமைதியாக நடத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் கேட்டுகொண்டனர். 

    ×