search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "full even in summer"

    • குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • அணை நிரம்பி உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் குன்றி மலையடி வாரத்தில் 42 அடி உயரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.

    இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம், உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் 10-க்கும் மேற்பட்ட காட்டாற்று பள்ளங்கள் வழியாக தண்ணீர் வந்தடைகிறது.

    இந்த அணையில் உள்ள இரு பாசன வாய்க்கால்கள் மூலமாக குண்டேரிப்பள்ளம், வினோ பாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான குன்றி, கம்பனூர், விளாங்கோம்பை, கல்லூத்து ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக குண்டேரிபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணை நிரம்பி தண்ணீர் நிரம்பிய நிலையில் தற்போது கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைந்து வறட்சியாக காணப்பட்டது.

    இந்நிலையில் நள்ளிரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக காலை 6 மணி நிலவரப்படி 151 கன அடி தண்ணீர் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடைந்தது.

    அணையின் முழு கொள்ளளவு 41.75 அடியாகும். ஆனால் அணையின் நீர்மட்ட 42 அடியை எட்டி தண்ணீர் ஆர்பரித்து வெளியேறி வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் மழையளவு 96.மி.மீட்டர் பதிவாகியுள்ள நிலையில், அணை நிரம்பியதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து 151 கன அடி நீரானது அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வினோபாநகர் வழியாக கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் பகுதிகளில் உள்ள 2தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் சென்று கலக்கிறது.

    தொடர்ந்து கனமழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகும் பட்சத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று இரவு வினோபாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் அடித்த சூறாவளி காற்றால் மக்காச்சோளம் பயிர்கள் சாய்ந்து சேதமானது.

    ×