search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former temple officer"

    காஞ்சி ஏகாம்பரநாதர் சிலை முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் கோவில் அதிகாரி வீரசண்முகமணி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
    திருச்சி:

    காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமசுந்தரர் சிலை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவின் போது சாமி வீதியுலா நடைபெற்று வந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு இந்த சிலை சேதம் அடைந்ததால அறநிலையத்துறை மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய சிலை செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது.

    இதுகுறித்து அண்ணாமலை என்பவர் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்திலும் புகார் செய்தார். இதை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி சிலை முறைகேடு தொடர்பாக அப்போது தமிழக அரசின் தலைமை ஸ்தபதியாக இருந்த முத்தையா, சிலையை செய்த மாசிலாமணி, கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஆகியோர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    அதன் பிறகு இந்த வழக்கில் எந்த மேல் நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் சிலை தொடர்பான வழக்குகள் தற்போது போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் மூலம் மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஏகாம்பரநாதர் கோவில் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக அப்போது அறநிலையத்துறை ஆணையராக இருந்த வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

    இந்த ஆண்டு ஏகாம்பநாதர் கோவில் உற்சவ விழா நடைபெற்ற அதே தினத்தில் சிலை முறைகேடு தொடர்பாக முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கைதான வீரசண்முகமணி கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று இரவோடு இரவாக திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். வருகிற 29-ந்தேதி வரை அவரை சிறை காவலில் வைக்க கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி அய்யப்பன் பிள்ளை உத்தரவிட்டுள்ளார்.

    ×