search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fintech Festival"

    தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். #Singapore #Modi #India
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் நிதிச்சேவை தொழில் நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் ‘பின்டெக்’ மாநாடு நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் நிறுவனங்களும், 30 ஆயிரம் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இதேபோல் சிங்கப்பூரில் கிழக்காசிய நாடுகளின் 13-வது உச்சி மாநாடும் நடக்கிறது.

    இவற்றில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார். நேற்று அவர் பின்டெக் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியபோது கூறியதாவது:-

    உலக பொருளாதாரத்தின் வடிவம் இன்று வேகமாக மாறி வருகிறது. புதிய உலகின் போட்டியாகவும், ஆதிக்க சக்தியாகவும் தொழில் நுட்பம் திகழ்கிறது. இது, மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்பை தருகிறது. மக்களை பொருளாதார ரீதியாகவும் உயர்த்துவதுடன் ஜனநாயகத்தையும் வலுப்படுத்துகிறது.

    இந்தியாவில் தற்போது மின்னணு தொழில் புரட்சி நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்திய கிராமங்கள் வளர்ச்சி திட்டங்களால் பெரும் மாற்றம் கண்டுள்ளன. கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டும் நாட்டின் 130 கோடி மக்களில் 120 கோடி பேருக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டைகள் (ஆதார்) வழங்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் மின்னணு பரிமாற்றமும் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கிடைத்து இருக்கிறது. ஏனென்றால் பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு மின்னணு பரிமாற்ற முறையில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது.

    உலகில் அதிக தகவல் பகிர்வு கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த தகவல் பகிர்வுக்கு மிகக் குறைந்த செலவே ஆகிறது. மேலும் தொழில் நுட்பத்துறையில் முதலீடு செய்வதற்கு உகந்த நாடாகவும் இந்தியா திகழ்கிறது. எனவே தொழில் நுட்ப நிறுவனங்கள் டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தொடங்கி ஆகிய திட்டங்களின் அடிப்படையில் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நேற்று காலை மோடி சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் பிராந்திய பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

    இதேபோல் கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சையும் அவர் சந்தித்து பேசினார். 
    ×