search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer siege"

    கடைமடைக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். #Ayyakkannu #Farmers

    திருச்சி:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து காவிரி ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனாலும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இதற்கிடையே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு இன்று திரண்டு வந்தனர். அங்கு அதிகாரிகள் இல்லாததால் தாங்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை கையில் ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் அளிக்க வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு 58 நாட்கள் ஆகிறது. ஆனால் புள்ளம்பாடி, பெருவளை, அய்யன் வாய்க்கால்களில் முழுமையான அளவில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கடைமடைக்கு தண்ணீர் வராததால் சாகுபடி செய்ய முடியவில்லை.

    திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கடைமடை பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தியும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் காவிரி நீரை நம்பி நடுவை செய்யப்பட்ட நாற்றுகள் அனைத்தும் காய்ந்து கிடக்கிறது. அதிகாரிகள் முன் கூட்டியே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் 20 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்து இருக்கலாம். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடைமடைக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறு தடுப்பணைகள், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம், கடைமடைக்கு நீர் செல்ல மேட்டூர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனால் உபரி நீர் கடலில் சென்று கலப்பதை தடுக்க முடியும். ஒன்று விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க உதவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண் டனர். அவர்கள் அனைவரும் பொதுப் பணித்துறை அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தால் திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்காக உதவி கமி‌ஷனர் சிகாமணி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். #Ayyakkannu #Farmers

    தஞ்சை ஆர் டி ஓ அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு அதிகாரி வராததை கண்டித்து கருகிய பயிற்களை கைகளில் எந்தி விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

    இதற்காக தஞ்சை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்.டி.ஓ. ஏலுவலத்துக்கு முன்பு திரண்டு இருந்தனர்.

    காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம், ஆர்.டி.ஓ. சுரேஷ் வராததால் நடைபெறாமல் இருந்தது. நேரம் செல்ல.. செல்ல விவசாயிகளும் மனம் தளராமல் காத்து கொண்டு இருந்தனர்.

    பின்னர் மதியம் 12 மணியை தாண்டியும் ஆர்.டி.ஓ. வராததால் விவசாயிகள் பொறுமை இழந்தனர்.

    இதையடுத்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் விவசாயிகள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகள், காய்ந்த பயிர்களை கைகளில் ஏந்தி கொண்டு அதிகாரியை கண்டித்து கோ‌ஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கர்நாடக அரசிடம் 1 டி.எம்.சி. தண்ணீருக்காக காத்திருந்தோம். தற்போது மேட்டூர் அணை 3 முறை நிரம்பி உள்ளது. ஆனால் எத்தனையோ டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு வீணாக செல்கிறது. அந்த தண்ணீரை சேமிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    தற்போது உழவுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தண்ணீர் தேவையான நேரத்தில் கடைமடை பகுதிகள் எல்லாம் காய்ந்து போனது.

    முக்கொம்பு அணையை சீரமைக்கிறோம் என்று தண்ணீரை திறக்க மறுக்கிறார்கள். பயிர்கள் காய்ந்து வருவதால் இன்று அதிகாரியை சந்தித்து முறையிடலாம் என்று வந்தோம் . ஆனால் 12 மணியை தாண்டியும் அதிகாரியை காணவில்லை. டெல்டா மாவட்டங்களை காப்பாற்ற கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×