search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EXAM RESULTS DELAY"

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதால் மேற்படிப்பு பாதிக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
    • தொலை தூர கல்வி இயக்ககத்தின் இந்த போக்கால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தொலை தூரக்கல்வி மூலம் தமிழ்செல்வன், மதன்குமார், பிரகாஷ் குமார் உள்ளிட்ட 5 மாணவர்கள் பி.காம். படிப்பில் சேர்ந்தனர்.

    மூன்று ஆண்டுகள் படிப்பின் கடைசி ஆண்டான் 2022-ல் நடத்த வேண்டிய இறுதித்தேர்வானது கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்டுள்ளது. மே மாதமே நடத்த வேண்டிய தேர்வானது காலதாமதமாக நடத்தப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக நிர்வாகம் தாமதமாக தேர்வை நடத்தியும் தற்போது வரை அதற்கான முடிவுகளை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் கால தாமதத்தால் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த அந்த மாணவர்கள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அதற்கான டான்செட் 2022 தேர்வில் இந்த மாணவர்களில் ஒருவர் 97.81 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பி.காம். படிப்பிற்கான தேர்வு முடிவுகள் வராததால் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

    தற்போது அவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.டபிள்யூ. படிக்க விண்ணப்பித்து உள்ளார். ஆனாலும் பி.காம். முடிவுகள் வராததால் கடந்த ஆகஸ்டு மாதமே ஆரம்பமான முதுகலை வகுப்பில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார்.

    இதனால் அந்த மாணவரின் ஓராண்டு காலம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டாலும் உரிய பதில் அளிப்பதில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் பல மாணவர்களின் மேற்படிப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேற்படிப்பு படிக்க முடியாமல் உள்ள மாணவர்களின் நலன் கருதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கம் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    ×