search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ensure"

    2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறினார். #Modi #House
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ (‘பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு’) திட்டத்தின் பயனாளிகளுடன் ‘நமோ ஆப்’ வழியாக நேற்று கலந்துரையாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வீட்டு வசதித்துறைக்கு பாரதீய ஜனதா கூட்டணி அரசு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடுகிற 2022-ம் ஆண்டுக்குள், ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும்வகையில் செயல்பட்டு வருகிறோம்.

    ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் சொந்த வீடு என்பது ஆசையாக உள்ளது. அப்படி ஒரு வீடு சொந்தமாக அமைகிறபோது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர்.

    பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம் என்பது வெறும் செங்கற்களும், சிமெண்டு கலவையும் அல்ல. அது மிகச்சிறப்பான வாழ்க்கை தரத்தையும், கனவுகளையும் நனவாக்குவதுதான்.

    அனைவருக்கும் வீடு திட்டமானது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மலைவாழ் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டம், மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிறது.

    இடைத்தரகர்களிடம் இருந்தும், ஊழல்வாதிகளிடம் இருந்தும் வீட்டு வசதித்துறையானது விடுபட வேண்டும் என்பதற்கு ஏற்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். பயனாளிகள் எந்த தொந்தரவும் இன்றி வீடு கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய உழைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×