search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrical staff"

    மின்துறை தனியார் மய முடிவை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என மின்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
    புதுச்சேரி:

    மின்துறையை தனியார்மயமாக்க புதுவை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை உருவாக்கி போராடி வருகின்றனர்.

    கடந்த திங்கட்கிழமை முதல் போராட்ட குழுவினர் எழுத்துப்பணிகளை முழுமையாக புறக்கணித்து உள்ளனர்.

    விதிப்படி மட்டும் வேலை செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எச்.டி. மீட்டர் ரீடிங் பணியை நிறுத்தியுள்ளனர். புதிய மின் இணைப்பும் வழங்கவில்லை.

    நேற்று கவர்னர் தமிழிசை, மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    மேலும் அவர் கூறும்போது, மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் அரசு என்ன முடிவு எடுத்தாலும் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்குமான நல்ல முடிவாகத்தான் இருக்கும்.

    நல்லது நடப்பதற்காகத்தான் எந்த முடிவும் எடுக்கப்படுகிறது. எந்த விதத்திலும், யாரும் பாதிக்காத அளவுக்குத்தான் அரசின் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்திருந்தார்.

    இருப்பினும் போராட்டம் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. போராட்டக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-

    டெல்லியில் மின்துறையை தனியார் மயமாக்கினர். அங்கு 60 சதவீதம் மின்துறை நஷ்டத்தில் இயங்கியதால் தனியார் மயமாக்கப்பட்டது.

    ஆனால் புதுவையில் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. எந்தவித நஷ்டமும் கிடையாது. அரசு துறைகளில்தான் மின்துறைக்கு வரவேண்டிய கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது.

    அப்படியிருக்க மின்துறையை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது? நாங்கள் அரசு ஊழியர்களாகவே பணியில் சேர்ந்தோம்.

    அரசு ஊழியர்களாகவே ஓய்வுபெற விரும்புகிறோம். மின்துறை தனியார் மய முடிவை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்த வாரம் முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×