என் மலர்
நீங்கள் தேடியது "Elderly jewelry robbery"
திருச்சி:
திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள திருவாச்சி கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலை. இவரது மனைவி செல்லம் (வயது 80). இவர்களுக்கு 2 மகன்கள்.
மகன்கள் இருவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள். செல்லம் மகன் அண்ணாத்துரை வீட்டு அருகில் தனியாக வசித்து வருகிறார். அண்ணாத்துரை வேளா வேளைக்கு தாய் செல்லத்துக்கு உணவு கொண்டு கொடுத்துவிட்டு பார்த்து விட்டு வருவார்.
நேற்று இரவு 8.30 மணிக்கு அண்ணாத்துரை உணவு எடுத்துக்கொண்டு தாய் செல்லத்தை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் வீட்டிற்குள் செல்லம் இல்லை. பின்பக்க கதவு திறந்து கிடந்தது.
எனவே தோட்டத்திற்கு சென்றிருக்கலாம் என நினைத்து டார்ச்லைட் எடுத்துக்கொண்டு அண்ணாத்துரை அங்கு சென்றார். அப்போது செல்லம் தோப்புக்குள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்து பார்த்த போது செல்லம் அணிந்திருந்த 3 பவுன் செயின், கம்மல், மோதிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்லம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று இரவு அவர் தோட்டத்திற்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர் செல்லத்தை தாக்கி நகையை பறித்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் மகன் அண்ணாத்துரை சென்று பார்த்ததால் செல்லத்தை உயிருடன் மீட்க முடிந்தது. அவரை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் யார் என விசாரணை நடக்கிறது.
இது தொடர்பாக வாத்தலை இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியை சேர்ந்த சிலர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மகன் அண்ணாத்துரையிடமும் விசாரணை நடந்து வருகிறது.






