search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education officers"

    திண்டிவனம் அருகே தழுதாளி பள்ளியில் வழங்கப்பட்ட இலவச சைக்கிளில் கர்நாடக அரசு முத்திரை வந்தது எப்படி? என்று கல்வி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். #FreeCycles
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1-ந்தேதி மாணவ- மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.

    மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளி வளாகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில சைக்கிளின் முன்புற கூடையில் வட்ட வடிவில் இருந்த முத்திரையில் மாணவி ஒருவர் படிப்பதுபோன்ற படம் இருந்தது. கன்னட மொழியில் ‘சார்வசனிகா சிக்சனா இலாகே, கர்நாடக சர்காரா’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் முத்திரையில்லாமல் கர்நாடக மாநிலத்தின் முத்திரையுடைய சைக்கிள்கள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கர்நாடக அரசு, அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்துவிட்ட நிலையில் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 204 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு 59,856 விலையில்லா சைக்கிள்கள் வழங்க ஒப்புதல் பெறப்பட்டது. அவற்றில் இதுவரை 39,542 சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. தழுதாளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 600 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    இவற்றில் 10 சைக்கிள்களில் மட்டும் கர்நாடக மாநில முத்திரை கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கூடை தவறுதலாக பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வழங்கப்படும் சைக்கிள்கள் ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 12 கூடைகள் அடங்கிய 1 பெட்டி வீதம் 15 பெட்டிகளில் 180 கூடைகள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவைகளில் தழுதாளி அரசு பள்ளியில் 10 சைக்கிள்களிலும், தைலாபுரம் அரசு பள்ளியில் 5 சைக்கிள்களிலும், கொந்தமூரில் 66 சைக்கிள்களிலும், கிளியனூரில் 18 சைக்கிள்களிலும், கரசானூரில் 81 சைக்கிள்களிலும் கர்நாடக அரசின் முத்திரை பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டு அவை உடனே அகற்றப்பட்டது. மற்றபடி கூடையை தவிர சைக்கிளின் மற்ற உதிரிபாகங்கள் அனைத்தும் தரமாக தமிழகத்திற்காக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகும். தற்போது அந்த சைக்கிள்களில் தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #FreeCycles
    ×