என் மலர்
நீங்கள் தேடியது "driver youth death"
ராமநாதபுரம்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது45), லாரி டிரைவரான இவர் நேற்று தனது லாரியில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்துக்கு புறப்பட்டார்.
அவருடன் காரைக்குடி அருகே உள்ள பெரும்பச் சேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் (20), லட்சுமி (45) ஆகியோரும் சென்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ராதானூர் கிராமத்தில் லாரியை நிறுத்திய சம்பத்குமார் ஆடுகளை இறக்க முற்பட்டார்.
அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்வயர் எதிர்பாராதவிதமாக லாரி மீது உரவியது. இதனால் லாரியில் மின்சாரம் பாய்ந்தது. அதில் இருந்த சம்பத்குமார், வெங்கடேஷ், லட்சுமி ஆகியோரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சம்பத் குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேஷ், லட்சுமியை சாதுர்யமாக மீட்டனர்.
பின்னர் அவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். லட்சுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






