search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dilute water"

    கரூர் மாவட்டம் அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி குமரேசன், ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரவக்குறிச்சி தாலுகா வல்லா குளத்துப்பாளையம், வெள்ளியம்பாளையம், வளையபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்து மனுவில், எங்கள் பகுதி வழியாக ஓடும் நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளைவாய்க்கால்களில் திருப்பூரில் இருந்து  சாயக்கழிவு நீர் சேர்ந்து வருவதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.

    இந்த நிலையில் அத்திப்பாளையம் அருகேயுள்ள பகுதியில் சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தார் கலவை செய்யும் ஆலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தால் காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆலை அமைப்பதற்கு அனுமதியை வழங்க கூடாது  என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    கரூர் அருகே ஜெகதாபி ஊராட்சி மோளகவுண்டனூரை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இந்த நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டிருப்பதாலும், ஊரில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத சூழல் உள்ளதாலும் கடந்த சில மாதங்களாக குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றோம். எனவே இதனை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதேபோல தமிழக மக்கள் முன்னேற்ற கழக கரூர் மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், குடும்பர், பண்ணாடி, தேவேந்திரகுலத்தார் உள்ளிட்ட 7 பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும். எனவே அதனை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் நகரில் சமூக நல்லிணக்கம் ஏற்படும் வகையில் அரசு சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என ஆதிதமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முல்லையரசு உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.  
    கடவூர் வாழ்வார் மங்கலம் கிராமமக்கள், மக்கள் பாதை அமைப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், நீர்நிலைகளை  பாதுகாக்கும் பொருட்டு வாழ்வார் மங்கலத்திலுள்ள ஏரியை தூர்வாரிபனை விதைகளை நட்டு வருகிறோம். இந்த நிலையில் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரவக்குறிச்சி தாலுகா துக்காச்சி புதூர் மக்கள் அளித்த மனுவில், நொய்யல் ஆற்றை ஒட்டி குடியிருந்து வரும் எங்களது வீடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர். எனவே எங்களுக்கு குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தினர் கொடுத்த மனுவில், கரூரிலுள்ள 125 ஆண்டு பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயத்தை சுற்றிலும் சிலர் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகளை வைக்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். #tamilnews
    ×