search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "denies ball"

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை கேப்டன் சன்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி. கூறியுள்ளது. #ICC #DineshChandimal
    செயின்ட்லூசியா:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை கேப்டன் சன்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி. கூறியுள்ளது. இந்த பிரச்சினையால் இலங்கை அணியினர் களம் இறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.



    இந்த நிலையில் இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை வெடித்தது. 2-வது நாள் போட்டி தொடர்பான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த நடுவர்கள் அலீம் தரும், இயான் கவுல்டும் பந்தை மர்மபொருளால் தேய்த்து இருப்பதற்கான அடையாளத்தை கண்டுபிடித்தனர்.

    இந்த தகவலை இலங்கை அணியினருக்கு தெரிவித்த நடுவர்கள் 3-வது நாள் போட்டிக்கு முன்பாக வேறு பந்து பயன்படுத்தப்படும் என்று கூறினர். இதனால் அதிருப்தி அடைந்த இலங்கை வீரர்கள் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் களம் இறங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நடுவர்கள் மைதானத்திற்கு வந்த போது கூட, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறையிலேயே அமர்ந்து இருந்தனர். போட்டி நடுவர் ஸ்ரீநாத், இலங்கை பயிற்சியாளர் ஹதுருசிங்கா, அணி மேலாளர் அசன்கா குருசிங்கா, கேப்டன் சன்டிமால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்ரீநாத்துடன் அவர்கள் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர்.

    ஒரு வழியாக 2 மணி நேரத்திற்கு பிறகு தங்களது கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை வீரர்கள் தொடர்ந்து விளையாட சம்மதம் தெரிவித்தனர். ஆனாலும் பந்தை சேதப்படுத்தியதற்காக இலங்கை அணி மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக வெஸ்ட் இண்டீசுக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது.

    இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘எங்களது வீரர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று அணி நிர்வாகம் உறுதிப்பட மறுத்துள்ளது. ஆதாரமில்லாத எந்த குற்றச்சாட்டையும் கூறினால் வீரர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 300 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.

    இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பதிவில், இலங்கை கேப்டன் சன்டிமால் மீது ஐ.சி.சி. நடத்தை விதிமுறையை மீறி பந்தின் தன்மையை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே போட்டியின் முடிவில் சன்டிமாலுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் ஆகியோர் ஏற்கனவே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மாட்டிக்கொண்டு நடவடிக்கைக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.  #ICC #DineshChandimal #tamilnews 
    ×