search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cycle sharing project"

    வெளிநாடுகளில் பிரபலமடைந்து வரும் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை சென்னையில் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. #BiCyclesharing
    சென்னை:

    நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னை மாநகராட்சி சார்பில் “மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்து கொள்கை” உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தியாகராயநகர், பாண்டிபஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் நடந்து செல்வோருக்கு நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    வெளிநாடுகளில் பிரபலமடைந்து வரும் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை சென்னையில் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த சேவையை ஜெர்மனி நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மெரினா, பெசன்ட்நகர், அண்ணாநகர் ஆகிய 3 இடங்களில் ‘சைக்கிள் ஷேரிங்’ மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.

    சைக்கிளின் மையங்கள் திறக்க 440 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 2,500 சைக்கிள்கள், ஜூன் மாதத்திற்குள் மேலும் 2500 சைக்கிள்கள் என மொத்தம் 5 ஆயிரம் சைக்கிள்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

    சைக்கிள் பயணத்திற்கு முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் தலா ரூ.9 கட்டணம் வசூலிக்கப்படும்.

    மேலும் ரூ.49 செலுத்தி ஒருநாள் முழுவதும் சைக்கிளை பயன்படுத்தும் வசதி, நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.249, 3 மாதங்களுக்கு ரூ.699 கட்டணத்தில் பயன்படுத்தும் வசதிகளும் உள்ளன. இந்த கட்டணங்களுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.

    இந்த சைக்கிள்களில் ஜி.பி.எஸ். வசதி உள்ளது. அதனால் இந்த சைக்கிள்கள் இருக்கும் இடத்தை எளிதில் அறிய முடியும். இத்திட்டத்தை காவல்துறை உதவியுடன் இணைந்து மேற்கொள்கிறோம். இந்த சேவையை ஸ்மார்ட் மொபைல் போன் செயலி வழியாக பெற முடியும். அந்த செயலி மூலமாக சைக்கிளை பூட்டவும், திறக்கவும் முடியும்.


    இந்த திட்டத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் இடம் மட்டுமே தருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் தன் சொந்த செலவில் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.

    சேவை நிறுவனத்துக்காக 3 இடங்களில் சைக்கிள் பழுது பார்க்கும் பணிமனைகள் அமைக்கவும் ஒரு இடத்தில் கட்டுப்பாடு அறை அமைக்கவும், மாநகராட்சி இடம் வழங்க உள்ளது. ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மிகுந்த கவனத்துடன் திட்டங்களை வகுத்து வருகிறோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர். #BiCyclesharing #ChennaiCorporation
    ×