search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cultivation of the crops"

    தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக வரும் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாது என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். #CM
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், கரூர் மாவட்டங்களில் உள்ள குறுவை சாகுபடி செய்யும் பகுதிகளில், பிரதானமாக மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்தே குறுவை நெல் சாகுபடி அமைகிறது.

    வழக்கமாக, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருக்கும் நிலையில், குறுவை நெல் சாகுபடிக்கு ஜுன் 12-ந் தேதி அன்று பாசனத்திற்காக அணை திறக்கப்படும். அவ்வாறு ஜுன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டால், மேற்கண்ட பகுதிகளில் 3.15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

    கடந்த 6 ஆண்டுகளாக, மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜுன் 12-ந்தேதியன்று அணையினை பாசனத்திற்கு திறக்க இயலவில்லை. எனினும், டெல்டா வேளாண் பெருமக்களின் நலனையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு புரட்சித்தலைவி அம்மா, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரினைக் கொண்டு குறுவை நெல் சாகுபடியினை மேற்கொள்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில், 2012-ம் ஆண்டு 12 மணி நேர முன்முனை மின்சாரமும், 2013-ம் ஆண்டிலிருந்து குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து, செயல்படுத்தி வந்தார்.

    அம்மாவின் பெருமுயற்சியினாலும், வேளாண் பெருமக்களின் ஏகோபித்த ஆதரவினாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் 2.07 லட்சம் ஏக்கரிலிருந்து அதிகபட்சமாக 3.16 லட்சம் ஏக்கர் வரையிலும், குறுவை நெல் சாகுபடி செய்து சாதனை படைக்கப்பட்டது.


    அதன் விளைவாக, 2012ஆம் ஆண்டில் 2.3 லட்சம் மெட்ரிக் டன்னும், 2013ஆம் ஆண்டில் 3.4 லட்சம் மெட்ரிக் டன்னும், 2014ஆம் ஆண்டில் 4.3 லட்சம் மெட்ரிக் டன்னும், 2015ஆம் ஆண்டில் 4.9 லட்சம் மெட்ரிக் டன்னும், 2016ஆம் ஆண்டில் 5 லட்சம் மெட்ரிக் டன்னும் அரிசி உற்பத்தி செய்து வேளாண் பெருமக்களால் சாதனை நிகழ்த்தப்பட்டது.

    சென்ற ஆண்டு, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின்படி, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரினை விடுவிக்காததால், மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறுவை நெல் சாகுபடி செய்ய போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால், அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, சென்ற ஆண்டில் குறுவை சாகுபடி செய்யும் நெல் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 56 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது.

    அம்மாவின் அரசு சட்ட ரீதியாக தொடர்ந்து போராடியதன் விளைவாக, மத்திய அரசு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்து 1.6.2018 அன்று அரசிதழில் வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களை காவிரி நீர் மேலாண்மை ஆணைய உறுப்பினராகவும், நீர்வள ஆதாரத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளரை காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினராகவும் நியமனம் செய்து, 1.6.2018 அன்று மத்திய அரசிற்கு தெரிவிக்கப்பட்டது. கேரள அரசு தன்னுடைய பிரதிநிதியை 6.6.2018 அன்று நியமனம் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. புதுச்சேரியும் தனது பிரதிநிதியை பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது. கர்நாடகா மட்டும் அதன் உறுப்பினர்களை நியமனம் செய்து இன்று வரை மத்திய அரசுக்கு பரிந்துரையை அளிக்கவில்லை என்று தெரிய வருகிறது.

    டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் எதிர்பார்க்கின்ற குறுவை நெல் சாகுபடியை குறித்த நேரத்தில் துவக்கிட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உடனே அமைத்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை 6.6.2018 அன்று டெல்லியில் நேரில் சந்தித்து, எனது 5.6.2018 நாளிட்ட கடிதத்தை அளித்தனர்.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள குழுமத்தின் தலைவர் மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிற மாநிலங்கள் அவற்றின் உறுப்பினர்களை நியமிக்காமல் இருந்தாலும் கூட, இந்த ஆணையத்தின் கூட்டம் விரைவில் கூட்டப் படும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டம் நடைபெற்று டெல்டா விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் கிடைக்கும் வரை, அம்மாவின் அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.

    இவ்வாறான அம்மா அரசின் நடவடிக்கைகள் மூலமாக விரைவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீர் கிடைக்கும் என நம்புகிறேன்.

    தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக மட்டுமே உள்ளது. வினாடிக்கு 2,190கன அடி மட்டுமே நீர்வரத்து வந்து கொண்டிருக்கின்றது. இதைக் கொண்டு, குறுவை நெல் சாகுபடிக்காக வழக்கமாக திறக்கப்படும் நாளான ஜுன் 12-ந்தேதியன்று அணையினை திறந்து விட இயலாத சூழ்நிலை உள்ளது.

    கால்வாய் பாசனம் இல்லாத காலங்களில் இதர நீர் ஆதாரங்களான வடிமுனைக் குழாய் மற்றும் ஆழ்துளை கிணறுகளிலிருந்து பெறப்படும் நீரினைக் கொண்டு டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.

    எனவே, தண்ணீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்தி, நடப்பாண்டில் குறுகிய கால நெல் மற்றும் பயறு வகைப் பயிரையும் சாகுபடி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #KuruvaiCultivation #MetturDamOpen #CM
    ×