என் மலர்
நீங்கள் தேடியது "Coimbatore Central Jail. Courtesy of Minister"
- சிறையில் அவரை சித்ரவதை செய்யும் நோக்கில் செக்கு இழுக்க வைக்கப்பட்டார்.
- வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் அவருடைய மார்பளவு சிலை, உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
கோவை :
சுதந்திர போராட்டத்தின் போது வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு அவர் 2 வருடம் 4 மாதம் 22 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறையில் அவரை சித்ரவதை செய்யும் நோக்கில் செக்கு இழுக்க வைக்கப்பட்டார்.
அவர் இழுத்த செக்கு சிறை வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழா கோவை மத்திய சிறையில் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் அவருடைய மார்பளவு சிலை, உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக், கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், எஸ்.பி ஊர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வ.உ .சி இழுத்த செக்கிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல் கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வ.உ.சி சித்ரவதைகளை அனுபவித்து, செக்கிழுத்த கொடுமை நடந்தது இந்த சிறையில்தான். வ.உ.சி இழுத்த செக்கை தொட்டு பார்த்து வணக்கம் செலுத்த தான் வந்துள்ளேன். தூத்துக்குடி என்று சொன்னால் வ.உ.சி என்ற பெயர் நினைவுக்கு வரும். அது நீடித்து இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் பிரதமர் மோடி படத்தை அரசு அலுவலங்களில் வைக்க வேண்டும் என்று சொல்கின்றனரே அதற்கு உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் நான் ஒரு உயர்ந்த தலைவரை பற்றி பேசி கொண்டிருக்கிறேன். அந்த சமயம் நீங்கள் யாரையோ பற்றி பேசுகிறீர்களே என காட்டமாக பதில் அளித்தார்.தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், அவினாசி சாலைக்கு வ.உ.சி பெயர் வைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. அந்த சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-அமைச்சரிடம் சொன்னால் செய்வார். அவரே நினைத்து செய்வார் என பதிலளித்தார்.
வ.உ.சி. செக்கிற்கு ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ மரியாதை செலுத்த சென்ற போது, அ.தி.மு.க கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மரியாதை செலுத்தி விட்டு வந்தார். அப்போது வைகோவும், வேலுமணியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர். பின்னர் அங்கிருந்து கிளம்பினார். இதே போல பல்வேறு அரசியல் கட்சியினரும் செக்கிற்கு மரியாதை செலுத்தினர்.






