search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore businessman kidnapping"

    கோவையில் ரூ.50 லட்சம் கேட்டு வியாபாரியை கடத்திய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் லிங்கப்பசெட்டிவீதியை சேர்ந்தவர் விஷ்ணுராஜ்(வயது 40). பூ மார்க்கெட்டில் மொத்த பூ வியாபரம் செய்து வருகிறார்.

    கடந்த 30-ந் தேதி அதிகாலை, மொபட்டில் கடைக்கு சென்ற விஷ்ணுராஜை ஒரு கும்பல் காரில் கடத்தியது. பின்னர் அவரது தந்தை கோவிந்த ராஜூக்கு போன் செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விஷ்ணு ராஜை தேடினர். நள்ளிரவில் அவர் திருச்சி அருகே பைபாஸ் சாலையில் காயங்களுடன் கிடக்கும் தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று விஷ்ணுராஜை மீட்டனர்.

    விஷ்ணுராஜின் வீடு அருகே உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் நல்லாம்பாளையத்தை சேர்ந்த தினகரன்(33), தடாகம் ரோட்டை சேர்ந்த சந்தோஷ் (22), உக்கடத்தை சேர்ந்த சதாம் உசேன் (23), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரி பிரசாத் (20), ராஜவீதியை சேர்ந்த அரவிந்த்(23), இடையர் வீதியை சேர்ந்த நாகராஜ்(26) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் தினகரன், சந்தோஷ் ஆகியோர் பூ மார்க்கெட்டில் வேலை பார்க்கின்றனர். மற்ற 4 பேரும் இவர்களின் கூட்டாளிகள் ஆவர். கைதான ஹரி பிரசாத் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சந்தோசுக்கு விஷ்ணு ராஜின் வியாபார தொடர்புகள் குறித்து நன்கு தெரிந்துள்ளது. சந்தோஷ் மற்றும் பூ வியாபாரம் செய்யும் இவரது அண்ணன் பிரபு ஆகியோர் வியாபார ரீதியாக பணக்கஷ்டத்தில் இருந்துள்ளனர். தினகரனும் வியாபாரத்தில் நஷ்டமாகி லட்சக்கணக்கில் கடன் வாங்கி அடைக்க முடியாமல் திணறினார்.

    எனவே தங்களது கூட்டாளிகள் மூலம் விஷ்ணுராஜை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டியதாக சந்தோஷ், தினகரன் ஆகியோர் போலீசாரிடம் கூறினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    விஷ்ணுராஜ் சமீபத்தில் ரூ.50 லட்சத்துக்கு ஒரு வீடு வாங்கியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர் பல பூ வியாபாரிகளிடம் இருந்து மொத்தமாக பூ கொள்முதல் செய்து கேரளாவுக்கு அனுப்பி வருகிறார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கேரளாவுக்கு சென்று வசூல் செய்து விட்டு, மறுநாள் பணத்துடன் தனியாக கடைக்கு செல்வது வழக்கம்.

    அப்போது ஆட்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் அவரை கடத்தி பணம் பறிக்க முடிவு செய்தோம். அதன்படி நண்பர் ஒருவர் மூலமாக மதுரையை சேர்ந்த சதீஷ்(38) என்பவரரை நாடினோம். அவர் தான் கடத்தல் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். நாங்கள் 2 பிரிவாக பிரிந்து திட்டத்தில் இறங்கினோம்.

    சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் விஷ்ணுராஜை கடத்தி காரில் கடத்தினர். பின்னர் நாங்களும் காரில் அவர்களுடன் சென்றோம். விஷ்ணுராஜ் சத்தம் போட்டதால் கத்தியால் குத்தி, மிரட்டினோம். அவரிடம் இருந்த ரூ.1½ லட்சத்தை பறித்துக் கொண்டு, அவரது தந்தை கோவிந்த ராஜூக்கு போன் செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினோம்.

    அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியதோடு, பிடி கொடுக்காமல் பேசினார். அவர் போலீஸ் நிலையம் செல்கிறாரா? என்பதை அறிவதற்காக நாங்கள் கடைக்கு திரும்பி, கோவிந்தராஜின் நடவடிக்கைகளை கண்காணித்தோம்.

    அப்போது கோவிந்தராஜ் போலீஸ் நிலையம் செல்வதை பார்த்தோம். எனவே போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக விஷ்ணுராஜை திருச்சி அருகே பைபாஸ் சாலையில் வீசிச்சென்றோம். போலீசார் துப்பு துலக்கியதில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்.

    இவ்வாறு வாக்குமூலம் அளித்தனர்.

    இந்த கடத்தல் வழக்கில் சந்தோஷின் அண்ணன் பிரபு, மதுரையை சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் என மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.1½ லட்சம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள், விஷ்ணுராஜின் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். #tamilnews
    ×