search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civil War Bloodbath"

    அசாம் தேசிய குடிமக்கள் பட்டியல் விவகாரம் உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என்று மம்தா பானர்ஜி கூறியிருப்பது கலவரத்தை தூண்டும் விதமாக இருப்பதாக மம்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #AssamNRC #MamtaBanerjee
    கவுகாத்தி:

    வங்க தேசம் நாட்டை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் அசாம் மாநிலத்தில் குடியேறியுள்ளனர். அத்தகைய சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது.

    அசாம் மாநிலத்தில் நேற்று முன்தினம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தற்போது அசாமில் உள்ள சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கருதப்படுகிறது.

    அந்த 40 லட்சம் பேரில் முஸ்லிம்கள், இந்துக்கள் என அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால் அசாம் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


    அசாமில் சுமார் 40 லட்சம் பேர் தேசிய குடிமக்கள் இல்லை என்று மத்திய அரசு அறிவித்து இருப்பதற்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் செயல்பாடு உள்நாட்டு போருக்கு வழி வகுக்கும் என்று அவர் கூறியுள்ளார். மக்களை மத்திய அரசு பிரித்தாள்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
    நேற்று டெல்லி சென்ற அவர் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். ஆனால் மத்திய அரசு தனது முடிவில் இருந்து ஒருபோதும் பின் வாங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் பற்றி விமர்சனம் செய்து பேசியதற்காக மம்தா பானர்ஜி மீது அசாம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அசாமில் உள்ள பாரதிய ஜனதா யுவமோர்ச் சாணும் அமைப்பு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.

    அதன் பேரில் மம்தா பானர்ஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டி விடுவதாக மம்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  #AssamNRC #MamtaBanerjee
    ×