search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai women organization"

    சபரிமலை கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை பெண்கள் அமைப்பு கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. #Sabarimala
    சென்னை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இதற்கு பா.ஜனதா, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு, போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு தீவிரமாக உள்ளது.

    சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். ஆனால் கோவிலுக்குள் பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    இதுவரை 16 பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றபோது போராட்டம் காரணமாக பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மணிதி பெண்கள் உரிமைகள் அமைப்பு சார்பில் 23-ந்தேதி 50 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.

    இது தொடர்பாக வக்கீலும், மணிதி அமைப்பைச் சேர்ந்தவருமான செல்வி கூறியதாவது:-

    சபரிமலை கோவிலுக்கு செல்லும் ஆண்களுக்கு வழிகாட்ட குருசாமி இருக்கிறார். ஆனால் அதுபோல் பெண்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை. இதனால் நாங்கள் பெண்கள் உரிமைகளை நிலைநாட்ட அவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.

    தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து பெண்கள் ஒன்றிணைந்து சபரிமலைக்கு செல்கிறோம்.

    அங்கு கேரளாவைச் சேர்ந்த ஆதிவாசி பெண்கள் அமைப்புகள் எங்களுக்கு தலைமை ஏற்று செல்கிறார்கள்.

    சபரிமலை கோவிலுக்கு செல்ல எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினேன். இதில் சபரிமலை பயணத்தின்போது எங்களுக்கு உதவி செய்ய பத்தனம்திட்டா போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    சபரிமலை கோவிலுக்கு செல்வது பெண்களின் உரிமை. அதை யாரும் தடுக்கக்கூடாது. கோவிலுக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு ஆதரவு அளிப்போம்.

    சபரிமலை பயணம் குறித்து பேஸ்புக்கில் தகவல் தெரிவித்ததும் பல பெண்கள் தொடர்பு கொண்டு கோவிலுக்கு உதவ வேண்டும் என்று அணுகினர்.

    சபரிமலை செல்வது குறித்து பேஸ்புக்கில் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை சிலர் பதிவிட்டனர். ஆனால் நேரிடையாக யாரும் மிரட்டவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளால் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala
    ×