search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai police officer"

    வரதட்சணை தராததால் திருமணத்துக்கு மறுத்ததாக சென்னை போலீஸ் அதிகாரி மீது முன்னாள் காதலி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை:

    சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 25). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்தபோது அதே மையத்தில் படித்த திருச்சியைச் சேர்ந்த வருண் குமார் (27) என்பவருடன் காதல் ஏற்பட்டது.

    பின்னர் வருண்குமார் ஐ.பி.எஸ். தேர்வு எழுதி பயிற்சிக்காக புதுடெல்லி சென்றார். பிரியதர்ஷினியும், ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடிக்காத நிலையில் வருண் குமாருக்கு உதவுவதற்காக டெல்லி சென்று தங்கினார்.

    இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு வருண் குமார்- பிரியதர்ஷினி இடையேயான காதலை இருவரது பெற்றோரும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். 2012-ம் ஆண்டு திருமணம் செய்ய தேதியும் குறிக்கப்பட்டது.

    வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு வருண்குமாரின் பெற்றோர், பிரியதர்ஷினி மற்றும் அவரது பெற்றோரிடம் ரூ.50 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம், பி.எம். டபிள்யூ. கார் வரதட்சணையாக வேண்டும் என்று கேட்டனர்.

    வரதட்சணை கொடுத்தால்தான் திருமணம் நடக்கும், இல்லையெனில் திருமணம் கிடையாது என்று உறுதியாக தெரிவித்து விட்டனர். மேலும் வருண்குமாரும் திருமணத்துக்கு மறுத்து விட்டார்.

    இதனால் திருமணம் நின்றது. அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பிரியதர்ஷினி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் வருண்குமார் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். இந்த வழக்கில் வருண்குமார் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.

    அவரது மனுவை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் நிராகரித்து விட்டதால் போலீசார் அவரை தேடிவந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து வருண் குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் மீதான வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி வருண்குமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்து வருண்குமார் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து பிரியதர்ஷினி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு வழக்கின் முழு விவரங்களையும் ஆராய்ந்து அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.

    இதற்கிடையே வருண் குமார்- பிரியதர்ஷினி திருமணம் நின்ற பின்பு வருண்குமார், பெண் போலீஸ் அதிகாரி ஒருவரையும், பிரியதர்ஷினி வக்கீல் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×