search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Businessman kills"

    காங்கயம் அருகே டீ குடிக்க சென்ற வியாபாரி கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காங்கயம்:

    காங்கயம்- கோவை ரோடு பொங்கலூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனி (வயது 46). மாடு வியாபாரி. நேற்று அதிகாலை எழுந்த பழனி டீ குடிக்க பேக்கரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    நாச்சிபாளையம் பிரிவு சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    வத்தலக்குண்டுவில் கடத்தப்பட்ட தொழிலதிபர் திருச்சி காவிரி ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பஸ்நிலையம் பின்புறம் ஊர்காலசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லுபிள்ளை(வயது70). பெரியகுளம் சாலையில் லேத் நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே வந்த நல்லுபிள்ளையை மைதடவி வசியப்படுத்தி ஒருகும்பல் திருச்சிக்கு கடத்திச்சென்றது.

    பின்பு அவரிடம் இருந்த நகைமற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு வத்தலக்குண்டுவிற்கு டிக்கெட் மட்டும் எடுத்து அனுப்பி வைத்தது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் நல்லுப்பிள்ளை மீண்டும் மாயமானார். இதனால் அவரது மகன் முருகேசன் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை. திருச்சிக்கு யாரும் கடத்தியிருக்ககூடுமோ என அங்கிருக்கும் உறவினர்களிடம் செல்போனில் விசாரித்தார்.

    திருச்சி காவிரி ஆற்றில் வத்தலக்குண்டுவை சேர்ந்த முதியவர் பிணமாக கிடப்பதாக திருச்சி போலீசார் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அந்த நபர் நல்லுபிள்ளை என தெரியவந்தது.

    அவரை யாரும் கடத்திச்சென்று கொலை செய்து காவிரி ஆற்றில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலதிபர் பலியானார்.
    விராலிமலை:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 30). இவர் அங்கு ஷூமார்ட் வைத்துள்ளார். இந்தநிலையில் திருச்சியில் வசித்து வரும் அவரது மாமனாரை பார்ப்பதற்காக நேற்றிரவு காரில் கோவில்பட்டியில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். காரை நிர்மலே ஓட்டினார்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் செல்லும் போது சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் இருந்த நிர்மல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனிடையே லாரி டிரைவர், லாரியை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் பலியான நிர்மலுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    திருச்சி -மதுரை நான்கு வழிச்சாலையில் டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்காக டோல் கேட்டுகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் டிரைவர்கள் சிலர் ஆங்காங்கே லாரிகளை நிறுத்தி ஓய்வு எடுத்து வருகின்றனர்.

    இரவு நேரங்களில் சாலையோரம் லாரிகளை நிறுத்தியிருப்பது தெரியாததால், அந்த வழியாக வரும் வாகனங்கள் லாரிகள் மீது மோதி, அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #tamilnews
    ×